தேனி மாவட்டம், சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3.91 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் இரா.வைத்திநாதன் ஆய்வு
தேனி, ஜூலை.17- தேனி மாவட்டம், சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் இன்று (17.7.2026) ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் அவர்கள் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியம், காமாட்சிபுரம் ஊராட்சி சுக்காங்கால்பட்டி கிராமத்தில் முல்லைப் பெரியாற்றிலிருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் இப்பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்ல ரூ. 1 கோடியே 91 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் இணைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டதுடன், குடிநீர் குழாயின் தரத்தன்மை குறித்து ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து வேப்பம்பட்டி ஊராட்சியில், ரூ.3 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பீட்டில் நீர்த்தேக்கத் தொட்டி சீரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு முடிவுற்றுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனை அடுத்து அப்பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி அலுவலக கட்டிடத்தின் தரத்தன்மை குறித்து ஆய்வு செய்தார். ...