தேனி மீறுசமுத்திரம் கண்மாயில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நவீனப்படுத்தும் பணிகள் : மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத்சிங் ஆய்வு
தேனி, மே.14-
தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சிப்பகுதியில் இன்று (14.5.2026) நீர்வளத்துறையின் சார்பில் மீறுசமுத்திரம் கண்மாயில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நவீனப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத்சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தேனி மாவட்டத்தின் தலைநகராக உள்ள தேனி நகரின் பொழுதுபோக்கு அம்சத்திற்காகவும், பொதுமக்கள் நடைபயிற்சி செய்வதற்காகவும் மீறு சமுத்திரம் கண்மாயில் நடைபயிற்சி பாதை மற்றும் பூங்கா அமைக்க வேண்டும் என பொதுமக்களிடமிருந்து கோரிக்கை வரப்பெற்றதை தொடர்ந்து, மீறுசமுத்திரம் கண்மாயில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நவீனப்படுத்தும் திட்டத்திற்கு ரூ.7.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் மீறுசமுத்திரம் கண்மாயின் கரையை பலப்படுத்துதல், நடைபாதை, பூங்கா, தடுப்புச் சுவர், படகுகள் நிறுத்துமிடம், நுழைவுவாயில், அலுவலக கட்டிடம், பாதுகாவலர் அறை, நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறை, சாய்வுதளம், அமரும் மேடை, உணவுக்கூடம் மற்றும் பாலம் அமைத்தல் மேலும், ஆகாய தாமரை அகற்றுதல், மரங்கள் நடுதல், பறவைகள் தீவு அமைத்தல், கண்காணிப்பு புகைப்படக் கருவி அமைத்தல், பூங்கா மின் வசதிகள் அமைத்தல், படகுகள் மற்றும் பூங்கா விளையாட்டு கருவிகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் இன்றைய தினம், மேற்குறிப்பிட்ட பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது செயற்பொறியாளர் (மஞ்சளாறு வடிநிலக்கோட்டம்) சரவணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஏ.எடிசன், உதவி செயற்பொறியாளர் சாலமோன் கிறிஸ்துதாஸ், தேனி தாசில்தார் சதீஸ்குமார், உதவி பொறியாளர் அரவிந்த் உள்பட பலர் உடனிருந்தனர்.
.............................
நாகராஜ் தலைமை நிருபர்



Comments