Skip to main content

தேனி மாவட்டம், சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3.91 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் இரா.வைத்திநாதன் ஆய்வு

தேனி, ஜூலை.17-

தேனி மாவட்டம், சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் இன்று (17.7.2026) ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் அவர்கள் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியம், காமாட்சிபுரம் ஊராட்சி சுக்காங்கால்பட்டி கிராமத்தில் முல்லைப் பெரியாற்றிலிருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் இப்பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்ல ரூ. 1 கோடியே 91 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் இணைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டதுடன், குடிநீர் குழாயின் தரத்தன்மை குறித்து ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து வேப்பம்பட்டி ஊராட்சியில், ரூ.3 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பீட்டில் நீர்த்தேக்கத் தொட்டி சீரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு முடிவுற்றுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனை அடுத்து அப்பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி அலுவலக கட்டிடத்தின் தரத்தன்மை குறித்து ஆய்வு செய்தார். மேலும் இப்பகுதியில் வேப்பம்பட்டி காளியம்மன் கோவில் முதல் ரங்கசாமி தோட்டம் வரை ரூ. 99 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு, அரசு வழிகாட்டுதலின்படி குறிப்பிட்ட விகிதாச்சார அளவில் ஜல்லி, தார் போன்ற பொருட்கள் சேர்க்கப்பட்டு சாலை அமைக்கப்பட்டுள்ளதா என பார்வையிட்டு, அலுவலர்களிடம் அதன் தன்மை குறித்துக் கேட்டறிந்தார்.

அதன் பின்னர் அழகாபுரி ஊராட்சி கரிச்சிப்பட்டி கிராமத்தில் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைக் கட்டிடம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு பணிகளை உரிய காலத்திற்குள் முடித்திட அலுவலருக்கு அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, அழகாபுரி ஊராட்சியில் ரூ.31 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் ஊராட்சி அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

முன்னதாக, அழகாபுரி ஊராட்சி அப்பிப்பட்டி கிராமத்தில் நியாயவிலைக் கடைக்கு சென்றுப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து பார்வையிட்டு, அத்தியாவசியப் பொருட்களை பொதுமக்களுக்கு தடையின்றி வழங்க பணியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் வைத்திநாதன் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆண்டாள்,  முருகேஸ்வரி, உதவிப்பொறியாளர் உமா மகேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
..............................
K.நாகராஜ், தலைமை நிருபர் 

Comments