தேனி மாவட்டத்தில் உள்ள 5 தாலுகா அலுவலகங்களில் 2-வது நாளாக நடைபெற்ற ஜமாபந்தியில் 948 கோரிக்கை மனுக்கள்
தேனி, ஜூன்.17-
தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம், பெரியகுளம், தேனி ஆண்டிபட்டி மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய 5 தாலுகா அலுவலகத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கான 1435-ஆம் பலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) அனைத்து தாலுகா அலுவலகங்களில் நேற்று முதல் (16.6.2026) நடைபெற்று வருகிறது.
இதில் தேனி மாவட்டம். உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) வருவாய் தீர்வாய அலுவலர் /மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் தலைமையில் 2-வது நாளாக இன்று (17.6.2026) நடைபெற்றது.
இவற்றில் உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட தேவாரம் தேவாரம் மலை. தே.மீனாட்சிபுரம், பண்ணைப்புரம். பொட்டிபுரம், சங்கராபுரம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் 156 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
இதில் உத்தமபாளையம் வட்டத்தில் இன்று நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் பயனாளிகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான இ-பட்டாக்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
இந்நிகழ்வில் உதவி இயக்குநர் (நில அளவை) அப்பாஸ், மாவட்ட அலுவலக மேலாளர் (பொது) சுந்தர்லால், வட்டாட்சியர் (உத்தமபாளையம்) பாலசண்முகம் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அதுபோல பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார் தலைமையில் பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட ஜெயமங்கலம் பிட் 1 ஜெயமங்கலம் பிட் -2 குள்ளப்புரம், மேல்மங்கலம் பிட்-1, மேல்மங்கலம் பிட்-2 ஆகிய வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் 282 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் (பொ) கவிதா தலைமையில் ஆண்டிபட்டி வட்டத்திற்குட்பட்ட புலிமான்கோம்பை, திம்மரசநாயக்கனூர் பிட் 1 திம்மரசநாயக்கனூர் பிட் -2 ஆகிய வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் 233 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
இதேபோன்று தேனி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் நல்லையா தலைமையில் தேனி வட்டத்திற்குட்பட்ட கோட்டூர், சீலையம்பட்டி, கொடுவிலார்பட்டி ஐங்கால்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் 124 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் போது தேனி தாசில்தார் சதீஸ்குமார் உள்பட கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
போடி தாலுகா அலுவலகத்தில் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சையது முகைதீன் இப்ராஹிம் தலைமையில் போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட போ.மீனாட்சிபுரம். பூதிப்புரம், கோடாங்கிபட்டி, உப்புக்கோட்டை ஆகிய வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற வருவாய்தீர்வாயத்தில் 173 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
2-வது நாளாக இன்றைய தினம் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு:இறப்புச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், வருமானச் சான்றிதழ். குடும்ப அட்டை மாதாந்திர உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இயற்கை மரணம், விபத்து நிவாரணத்தொகை, நலிந்தோர் உதவித்தொகை. நிலம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 948 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) பெறப்படும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, தகுதி வாய்ந்த மனுக்களுக்கு உடனடி தீர்வு வழங்கிட மாவட்ட கலெக்டர் துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
..............................
நாகராஜ், தலைமை நிருபர்


Comments