தேனி மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு, மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்கி, முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் குறித்து கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் ஆய்வு மேற்கொண்டார்.
தேனி, ஜூன்.4-
கோடை விடுமுறை முடிந்து இன்று (04.06.2026) பள்ளிகள் திறக்கப்பட்டுள்தை முன்னிட்டு, தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், இலட்சுமிபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, இலட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் வழங்கினார்.
தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, தமிழ்நாட்டில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இலட்சுமிபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவின் தரம் மற்றும் மாணவர்களுக்கு போதுமான அளவில் உணவு வழங்கப்படுகிறதா என்பன குறித்து மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், உணவு தயாரிக்கும் சமையலறை, குடிநீர் வசதி, உணவுப் பொருட்களின் இருப்பு போன்றவற்றை பார்வையிட்டார்.
இதனைத்தொடர்ந்து, பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட இலட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்கி கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
மேலும், பள்ளி வளாகம், வகுப்பறைகள் மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் ஆய்வு செய்து தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும், மாணவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் உறுதி செய்யப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, இலட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பசுமைப் பள்ளி (Green School) திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை நட்டார். இந்த ஆய்வின் போது திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சந்திரா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஏ.எடிசன், பெரியகுளம் தாசில்தார் மருதுபாண்டி உள்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
..........................
நாகராஜ், தலைமை நிருபர்




Comments