தேனியில், மகளிர் கட்டணமில்லா "வெற்றிப் பயணம்" திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக 4 வெற்றிப் பயண பஸ்களை மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தேனி, அக்.2-
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் 2.10.2026 அன்று சென்னை, கோயம்பேடு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் இருந்து தமிழ்நாடு முழுவதும் மகளிர் கட்டணமில்லா "வெற்றிப் பயணம் திட்டத்தை" தொடங்கி வைத்ததை தொடர்ந்து, தேனி மாவட்டம், கர்னல் ஜான் பென்னிகுயிக் தேனி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 4 வெற்றிப் பயண பஸ்களை மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் வசிக்கும் மகளிரும் போக்குவரத்து கட்டணத்தால் தமது வாய்ப்புகளை இழக்கக்கூடாது என்ற சமூகநீதி சிந்தனையை முதன்மையாகக் கொண்டு, மகளிர் கட்டணமில்லா பயணத் திட்டத்தை விரிவுப்படுத்தி, பெருமளவில் பயனளித்திடும் விதமாக, 'வெற்றிப்பயணம்' திட்டம் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, இன்று தமிழ்நாடு முழுவதும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட் திண்டுக்கல் மண்டலத்தின் மூலம் தேனி மாவட்டத்தில், மதுரை - போடி வழித்தடம், மதுரை - கம்பம் வழித்தடம், மதுரை - குமுளி வழித்தடம், தேனி - மதுரை வழித்தடம், தேனி திண்டுக்கல் வழித்தடம், தேனி வருசநாடு வழித்தடம், போடி - மதுரை வழித்தடம், தேவாரம் மதுரை வழித்தடம், கம்பம் திண்டுக்கல் வழித்தடம், கம்பம் மதுரை வழித்தடம், குமுளி - திண்டுக்கல் வழித்தடம், குமுளி மதுரை வழித்தடம், கம்பம் இரவங்கலாறு மலைப்பகுதி வழித்தடம் என மொத்தம் 52 வழித்தடங்களில் 589 நடைகள் என 83 புறநகரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மகளிர் கட்டணமில்லா வெற்றிப் பயணம் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்ட பயணிகள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் பிரேம் ஆனந்த், தேனி கிளை மேலாளர் பாண்டியராஜன் மற்றும் அரசு அலுவலர்கள், போக்குவரத்துக்கழக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
...........................
K.நாகராஜ், தலைமை நிருபர்




Comments