Skip to main content

தேனி அல்லிநகரம் நகராட்சியின் குப்பை கிடங்காக மாறும் பைபாஸ் சாலை : வீரப்ப அய்யனார் கோயிலுக்கு செல்லும் வழியில் துர்நாற்றம் வீசும் அவலம்; குப்பைகளை கொட்ட மாற்று இடம் தேர்வு செய்ய இந்து எழுச்சி முன்னணி கோரிக்கை

தேனி, அக்.17-

தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட வீரப்ப அய்யனார் கோயிலுக்கு செல்லும் வழியில், திண்டுக்கல் TO குமுளி பைபாஸ் சாலை அருகே குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால், அப்பகுதி குப்பைக் கிடங்காக மாறி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இதனால், வீரப்ப அய்யனார் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

நகரின் தூய்மையை பாதுகாக்க வேண்டிய நகராட்சி நிர்வாகம், பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் குப்பைகளை அகற்றுவதற்கும், அவற்றை முறையாக கையாளுவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தொடர்பாக இந்து எழுச்சி முன்னணி தேனி மாவட்டச் செயலாளர் இராமமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, வீரப்ப அய்யனார் கோயிலுக்கு செல்லும் பாதையில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுத்து, அப்பகுதியை தூய்மையாக நகராட்சி நிர்வாகம் பராமரிக்க வேண்டும்.

மேலும், பொதுமக்களின் சுகாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் கருத்தில் கொண்டு, குப்பைகளை கொட்டுவதற்கு பொருத்தமான மாற்று இடத்தைத் தேர்வு செய்து, குப்பை மேலாண்மையை அறிவியல் பூர்வமாக செயல்படுத்த வேண்டும்.

மேலும் இந்து எழுச்சி முன்னணியின் கோரிக்கைகள்:

1. கம்பம் பைபாஸ் சாலை அருகே, வீரப்ப அய்யனார் கோயிலுக்குச் செல்லும் வழியில் குவிந்துள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

2. அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதை தடுக்க உரிய தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

3. பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், நகராட்சி குப்பைகளைக் கொட்டுவதற்கு மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.

4. குப்பைகளை முறையாகப் பிரித்து, பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கான நிரந்தரத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

5. இனிவரும் காலங்களில் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்லும் பாதைகளில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்க உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களின் சுகாதாரமும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் மிகவும் முக்கியமானவை.

எனவே, தேனி அல்லிநகரம் நகராட்சி நிர்வாகமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இப்பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு, குப்பைகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். இவ்வாறு இந்து எழுச்சி முன்னணி தேனி மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி அந்த அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார். 

..............................

K.நாகராஜ் தலைமை நிருபர்

Comments