Skip to main content

தேனி அல்லிநகரம் நகராட்சியில், அலுவலக சீட்டில் சரிவர இல்லாத ஆணையாளரால் நிர்வாக பணிகள் முடக்கம்: தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

தேனி, செப்.7-

தேனி மாவட்டத்தில் சிறப்பு நிலை அந்தஸ்தில் உள்ள தேனி அல்லிநகரம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் ஒரு லட்சத்திற்கு மேல் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, சாக்கடை வசதி, தெரு மின்விளக்கு, சுகாதாரம், சாலை வசதி போன்ற அடிப்படை தேவைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

இதற்காக நகராட்சி பகுதியில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்களிடம் இருந்து சொத்து வரி , குடிநீர் குழாய் வரி, தொழில் வரி, காலி இட வரி மற்றும் நகராட்சிக்கு சொந்தமான குத்தகை மூலம் வரி வசூல் என ஆண்டுக்கு சுமார் ரூ.20 கோடி வரை நகராட்சி நிர்வாகம் வசூல் செய்து வருகிறது. இந்த வரிகள் மூலம் வரும் பணத்தை நகராட்சி பொது நிதியில் இருப்பு வைக்கப்பட்டு நகராட்சி பகுதி மக்களின் முக்கிய தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும்.

இப்படி நகராட்சிக்கு வருவாயை தாராளமாக வாரி அள்ளி கொடுக்கும் மக்கள் தங்களது வீட்டு வரி விதிப்பு புதிய குடிநீர் குழாய் இணைப்பு, கட்டிட அனுமதி, சுகாதார பிரச்சினை மற்றும் நகராட்சி அலுவலக கோரிக்கை,  பொது பிரச்சினைகள் போன்ற கோரிக்கை தொடர்பாக நகராட்சி அலுவலகத்திற்கு  சென்றால் சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலர்கள் நகராட்சி ஆணையாளரிடம் தான் கூற வேண்டும் என்று தெரிவித்து விடுகின்றனர். 
இதனால் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்திற்கு ஆணையாளரை சந்திக்க வரும் போதெல்லாம் ஆணையாளர் அவருடைய அறையில் அதாவது சீட்டில் இருப்பதில்லை அதுபோல அலுவலகத்திற்கு காலையில் சரியான நேரத்திற்கு வருவதில்லை. பகல் 12 மணிக்கு மேல் தான் வருவாராம். மேலும் அவர் அலுவலகத்தில் இருப்பது போல் தோன்றும் திடீரென எங்கே செல்வார் என்று தெரியாது கேட்டால் மீட்டிங் சென்றுள்ளார். மற்றொரு நகராட்சி பொறுப்பு ஆணையாளராக உள்ளார் அங்கு சென்றுள்ளார். சென்னை சென்றுள்ளார் என்று பலவித கதைகளை அங்குள்ள கடைநிலை ஊழியர்கள் ஆணையாளரை கோரிக்கை தொடர்பாக பார்க்க வரும் பொதுமக்களிடம் தெரிவித்து விடுகின்றனர்.

இதனால் ஆணையாளரை சந்திக்க வந்த பொதுமக்கள் உள்ளிட்டோர் சில முறைகள் அலைந்து பார்த்து விட்டு வேறு வழியின்றி புலம்பிக்கொண்டே அலுவலகத்தை விட்டு வெளியே செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது.
பொதுமக்களுக்கு தான் இந்த நிலை என்றால் நகராட்சி கவுன்சிலர்களே தங்களது வார்டு குறைகள் குறித்து மனுக்கள் கொடுக்க நகராட்சி ஆணையாளரை அணுகினால் அவர்களுக்கும் அதே நிலைதான் ஏற்படுகிறதாம்.
இது குறித்து தேனி அல்லிநகரம் நகராட்சி 5-வது கவுன்சிலர் கிருஷ்ண பிரபா அய்யப்பன் கூறுகையில், எனது வார்டு பகுதியில் தெரு மின்விளக்குகள் அமைத்து தர கோரி மனுக்கள் எழுதி வைத்து கொண்டு ஆணையாளர் சந்திக்க கடந்த 10 நாட்களாக நான் அலைந்து வருகிறேன். ஒவ்வொரு முறை வரும் போதும் மனுவில் உள்ள தேதியை மாற்றும் சூழ்நிலை ஏற்படுகிறது. கவுன்சிலர்கள் ஆகிய எங்களுக்கே இந்த நிலை ஏற்படுகிறது என்றால் பொதுமக்கள் ஆணையாளர் சந்திப்பது என்பது அவர்களுக்கு திண்டாட்டம் தான் என்றார்.

இது ஒரு புறம் இருக்க, இந்த நகராட்சி ஆணையாளரை கேள்வி கேட்க வேண்டிய நகர் மன்ற தலைவர் தரப்புக்கும், ஆணையாளர் தரப்புக்கும் தற்போது சுமூகமான உடன்பாடு இல்லை. ஏன் நகர் மன்ற தலைவர் பேச்சை ஆணையாளர் கேட்பதே இல்லையாம் என்று தெரிய வருகிறது. இதனால் தன்னை யார் கேட்பார் என்ற ஆணவத்தோடு தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் தனது அலுவலக பணிகளை மேற்கொள்வது போல் நடித்து வருகிறார்.

இதன் காரணமாக தேனி அல்லிநகரம் நகராட்சியில் அலுவலக பணிகளில் சுணக்கம் ஏற்பட்டு முடங்கி போய் வருகிறது. எனவே தேனி மாவட்டத்தின் தலைநகரில் உள்ள தேனி அல்லிநகரம் நகராட்சியில் ஆணையாளராக பணியாற்ற சுறுசுறுப்புடன், பணி ஏய்ப்பு செய்யாமல், வாங்கும் சம்பளத்திற்கு ஏற்றார் போல் வேலை செய்யக்கூடிய நல்ல அலுவலரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
.............................
நாகராஜ்,, தலைமை நிருபர் 


Comments