தேனி மாவட்டத்தில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை மரு.இரா.வைத்திநாதன் வழங்கினார்
தேனி, செப்.28-
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் 28.9.2026 அன்று மதுரை இராசாசி அரசு மருத்துவமனையில் இருந்து தமிழ்நாடு முழுவதும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை காணொளிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து தேனி மாவட்டம், பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரத்தை மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் வழங்கினார்.
அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தை ஊக்குவித்தல். தாய் மற்றும் சேய் நலம் பேணுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் கடந்த ஜூன் 22 2026 முதல் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து. இன்று இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கும் விதமாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை. பெரியகுளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் கம்பம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களிலிருந்து மாவட்டத்தின் பிற அரசு மருத்துவமனைகள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு எடுத்துச்சென்று, அங்கு பிரசவிக்கும் தாய்மார்களுக்கு வழங்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தேனி மாவட்டத்தில், பெரியகுளம் மருத்துவ வட்டாரத்தில் 429 குழந்தைகளுக்கும், தேனி மருத்துவ வட்டாரத்தில் 376 குழந்தைகளுக்கும், ஆண்டிபட்டி மருத்துவ வட்டாரத்தில் 340 குழந்தைகளுக்கும், போடிநாயக்கனூர் மருத்துவ வட்டாரத்தில் 325 குழந்தைகளுக்கும், கடமலைக்குண்டு மயிலாடும்பாறை மருத்துவ வட்டாரத்தில் 185 குழந்தைகளுக்கும், கம்பம் மருத்துவ வட்டாரத்தில் 338 குழந்தைகளுக்கும், சின்னமனூர் மருத்துவ வட்டாரத்தில் 268 குழந்தைகளுக்கும், உத்தமபாளையம் வட்டாரத்தில் 282 குழந்தைகளுக்கும் என மொத்தம் 2543 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. மேலும், இனிவரும் மருத்துவ காலங்களில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் நாளில் தாய்மாமன் தங்கமோதிரம் (ஒரு கிராம்) வழங்கி வழியனுப்பி வைக்கப்படுவார்கள்.
தாய்மாமன் தங்கமோதிரம் பெற்ற குழந்தைகளின் தாய்மார்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கையில், என் பெயர் ராமுத்தாய் ராசி. நான் தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை மூங்கில்கார படித்துரை தெருவில் வசிக்கின்றேன். எனக்கு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் பெண் குழந்தை பிறந்தது. என் குழந்தையின் பெயர் மகிழினி.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தின் கீழ் இன்று என் குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதனை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும். மாவட்ட கலெக்டர் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதேபோன்று என் பெயர் கீர்த்தனா, பெரியகுளம் வடகரை கிருஷ்ணாபுரம் தெருவில் வசித்து வரும் கீர்த்தனா என்பவர் தெரிவிக்கையில், எனக்கு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் கடந்த ஜுன் மாதம் பெண் குழந்தை பிறந்தது. என் குழந்தையின் பெயர் ரிதன்யா. தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தின் கீழ் இன்று என் குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை தொடங்கி வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நிகழ்வில் பெரியகுளம் சப்- கலெக்டர் தவ்லேந்து, மாவட்ட சுகாதார அலுவலர் வரதராஜன், மருத்துவ பணிகள் இணை இயக்குநர் அன்பு செழியன், மருத்துவக் கண்காணிப்பாளர் கருத்துமாய் உட்பட மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
.................................
K.நாகராஜ், தலைமை நிருபர்





Comments