மேகமலை புலிகள் காப்பகம் (மேகமலை கோட்டம்) நொச்சியோடை பழங்குடியினர் குடியிருப்புகளுக்கான மாதிரி சூரிய ஆற்றல் பழங்குடியினர் கிராம திட்ட தொடக்க விழா: தேனி கலெக்டர் வைத்திநாதன் தலைமையில் நடைபெற்றது.
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 22.9.2026 அன்று ஸ்ரீவில்லிப்புத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் (மேகமலை கோட்டம்) மற்றும் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு) இணைந்து நடத்திய நொச்சியோடை பழங்குடியினர் குடியிருப்புகளுக்கான மாதிரி சூரிய ஆற்றல் பழங்குடியினர் கிராம திட்ட தொடக்க விழா மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் தலைமையில் நடைபெற்றது.
நொச்சியோடை என்பது ஸ்ரீவில்லிப்புத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் உட்பட்ட மேகமலை வனப் பகுதியின் மையப் பகுதியில் (Core Area) அமைந்துள்ள சுமார் 32 கி.மீ. தொலைவில் உள்ள தொலைதூர பழங்குடியினர் குடியிருப்பாகும். இக்குடியிருப்பில் 18 குடும்பங்களை சேர்ந்த 76 பேர் வசித்து வருகின்றனர். பல வருடங்களாக மின்சார வசதி இன்றி வாழ்ந்து வந்த இப்பகுதி மக்கள், வெளிச்சத்திற்காக மண்ணெண்ணெய் விளக்குகளை நம்பியிருந்ததுடன், கைப்பேசிகளை மின்னேற்றம் செய்யவும், அடிப்படை தகவல் தொடர்பு வசதிகளைப் பெறவும் வனப்பகுதிக்கு வெளியே நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருந்தது.
இப்பழங்குடியினரின் உரிமைகள் வன உரிமைச் சட்டம் 2006-ன் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களது நலனையும், வனப்பாதுகாப்பையும் ஒருங்கிணைக்கும் வகையில் நபார்டின் ஊரக உள்கட்டமைப்பு ஊக்குவிப்பு நிதி (RIPF) ஆதரவுடன் ரூ.25 லட்சம் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மாதிரி சூரிய ஆற்றல் பழங்குடியினர் கிராமத்திட்டத்தின் மூலம் 13 பழங்குடியினர் குடும்பங்களுக்கும் சூரிய ஆற்றல் அடிப்படையிலான மினி கிரிட்மின்சார வசதி, 36 சோலார் தெரு விளக்குகள், வீட்டு எல்.இ.டி. விளக்குகள் கைப்பேசி மின்னேற்ற வசதி சமூகக் கூடம் மற்றும் பொதுப்பயன்பாட்டிற்கான தொலைக்காட்சி வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் தடையற்ற மற்றும் நம்பகமான மின்சார வசதியை வழங்குவதோடு குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் இரவு நேர பாதுகாப்பை மேம்படுத்தியுள்ளது.
மேலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த இப்புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டம். பழங்குடியினரின் வாழ்க்கைத்தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்சார வசதி கிடைத்ததன் மூலம் குழந்தைகளின் கல்வி வாய்ப்புகள் மேம்பட்டுள்ளதுடன். தகவல் தொடர்பு மற்றும் தகவல் அணுகல் அதிகரித்துள்ளது. சமூக ஒற்றுமை வலுப்பெற்றதோடு. வாழ்வாதார முன்னேற்றம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வும் உயர்ந்துள்ளது. உயிரியல் பன்முகத் தன்மையைப் பாதுகாத்தபடி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை எவ்வாறு உருவாக்க முடியும் என்பதை எடுத்துக்காட்டும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் நிலையான வளர்ச்சிக்கான வெற்றிகரமான முன்மாதிரியாக இத்திட்டம் திகழ்கிறது.
இத்திட்டத்தின் கீழ் சூரிய ஆற்றல் மினி கிரிட் அமைப்பு. 36 சோலார் தெரு விளக்குகள், வீட்டு மின் வசதிகள், சமூகக் கூடம் மற்றும் 50 அங்குலத் தொலைக்காட்சி வசதியுடன் கூடிய சமூக மையம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பழங்குடியினர் வாழ்வாதார மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் இத்திட்டம் மாநில அளவில் ஒரு முன்மாதிரித் திட்டமாக ள்ளது. தொலைதூர பழங்குடியினர் குடியிருப்புகளுக்கு தூய்மையான மற்றும் நம்பகமான மின்சார வசதியை வழங்குவதன் மூலம் கல்வி, தகவல் தொடர்பு, பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை இத்திட்டம் ஏற்படுத்தும்.
மேலும், நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சாரவசதியை வழங்குவதன் மூலம் தொலைதூர வனப் பகுதிகளில் வாழும் பழங்குடியினரின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதோடு, நிலையான வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
மேலும் மாவட்ட நிர்வாகம் நபார்டு மற்றும் வனத்துறையின் ஒருங்கிணைந்த செயல்பாட்டினை மாவட்ட கலெக்டர் வைத்திநாதன் பாராட்டினார்.
அதனைத்தொடர்ந்து நொச்சியோடை பழங்குடியினர் குடியிருப்பு பிரதிநிதிகள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு இத்திட்டத்தின் மூலம் கிடைத்துள்ள மின்சார வசதிக்காக மாவட்ட நிர்வாகம், நபார்டு மற்றும் வனத்துறைக்கு நன்றியை தெரிவித்தனர்.
முன்னதாக, நபார்டின் பழங்குடியினர் மேம்பாட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாக பழங்குடியினர் உற்பத்தியாளர் நிறுவனம் (FPO) சார்பில் உருவாக்கம் மற்றும் மேம்பாட்டிற்கான ரூ.2730 இலட்சம் மதிப்பிலான ஒப்புதல் ஆணையிணை. அந்திறுவனத்தின் இயக்குநர் குழு உறுப்பினர்களிடம் (BoDs) மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
இந்த பழங்குடியினர் உற்பத்தியாளர் நிறுவனம் தேன் சேகரித்து மதிப்புக்கூட்டுப் பொருளாக மாற்றி விற்பனை செய்வதோடு, காபி. மிளகு, ஏலக்காய் போன்ற பணப்பயிர்களையும் பழங்குடியினர் மக்களிடம் நேரடியாக கொள்முதல் செய்து அதனை மதிப்புக்கூட்டுப் பொருட்களாக மாற்றி வெளிசந்தைகளில் விற்பனை செய்யவும் திட்டமிடல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், துணை இயக்குநர் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம். மேகமலை கோட்டம்) விவேக்குமார் பி. யாதவ், முதன்மை பொது மேலாளர் (நபார்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) மனோஜ், மாவட்ட வளர்ச்சி மேலாளர் (நபார்டு) ராபின்சன் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
...............................
K.நாகராஜ், தலைமை நிருபர்


Comments