சர்வேயர் மீது நடந்த தாக்குதலை கண்டித்து: தமிழ்நாடு நில அளவைத்துறை அலுவலர்கள் சங்கத்தினர் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம்
தேனி, செப்.22-
தமிழ்நாடு நில அளவைத்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் சின்னமனூரில் சர்வேயர் மீது நடந்த தாக்குதலை கண்டித்து தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு தேனி மாவட்ட தலைவர் வெங்கடேஷ் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் திருமூர்த்தி, தேனி நகர சர்வேயர் கணேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் நில அளவைத்துறை அலுவலர்கள் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து நில அளவைத்துறை அலுவலர்கள் சங்கத்தினர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது,
தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, சின்னமனூர் நகர சார் ஆய்வாளராக பணிபுரியும் ஜெகன்குமார் முதலமைச்சரின் தனிப்பிரிவு மனு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவின் பேரில் அளவை பணிக்கு சென்றுள்ளார். அப்போது அவர் குண்டர்களால் தாக்கப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதின் பேரில் குண்டர்கள் நால்வர் மீதும் Crime No. 497/2026-ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. மேலும் குண்டர்கள் இதுவரை கைதும் செய்யப்படவில்லை.
ஏற்கனவே இந்த குற்றவாளிகள் நால்வர் மீதும் மேற்படி போலீஸ் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாலும், மேலும் மேலும் சமூகத்தில் இவர்களால் குற்றங்கள் ஏற்படுவதாலும் மேற்படி நால்வர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இனிமேல் இதுபோன்ற குற்ற சம்பவங்களிலிருந்து நில அளவை பணியாளர்களை பாதுகாத்து உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
.................................
K.நாகராஜ், தலைமை நிருபர்




Comments