Skip to main content

தேனியில் உலக அமைதி தின விழா: சிறந்த சமூக சேவகர் விருதினை போடி குறிஞ்சிமணிக்கு மாவட்ட மக்கள் நீதிமன்றம் தலைவர் நீதிபதி இரஜினி வழங்கினர்

தேனி, செப்.22-
தேனி மாவட்ட உலக அமைதிக்குழு மற்றும் மனிதநேய காப்பகம் சார்பில் உலக அமைதி தினத்தை முன்னிட்டு, ஒற்றுமையை வலியுறுத்தியும் உலகப் போர்களை நிறுத்தக்கோரியும் மாபெரும் விழிப்புணர்வு பேரணி மற்றும் உலக அமைதிக்கான விருது வழங்கும் விழா 21.9.2026 அன்று தேனியில் நடைபெற்றது.

தேனி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை நடைபெற்ற உலக அமைதி தின விழிப்புணர்வு பேரணியை தேனி மாவட்ட போலீஸ் ஏ.டி.எஸ்.பி., மகேஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். 

இந்த ஊர்வலத்தில் தேனி வெளிச்சம் அறக்கட்டளை நிறுவனர் சமூக ஆர்வலர் சிதம்பரம் உள்பட நூற்றுக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கையில் விழிப்புணர்வுப் பேனர்களை ஏந்தி சென்றனர்.
அதனைத்தொடர்ந்து தேனி 'வெஸ்டர்ன் காட்ஸ்' ஹோட்டலில் உலக அமைதிக்கான விருது வழங்கும் விழா மாலையில் நடைபெற்றது. விழாவிற்கு ஏ.எம்.ஆர் குழும நிறுவனங்களின் தலைவர் (AMR Group of Companies) AMRR. சந்திரகுமார் தலைமை தாங்கினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தேனி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவரும், மாவட்ட நீதிபதியுமான A.K.K. இரஜினி, அவர்கள், போடிநாயக்கனூர் தொகுதியின் முக்கிய அரசியல் பிரமுகரும், சமூக சேவகருமான  குறிஞ்சிமணி அவர்களுக்கு "சிறந்த சமூக சேவைக்கான விருது" வழங்கி, பொன்னாடை போர்த்தி, உயரிய விருது கேடயத்துடன் கௌரவித்தார். 

இதேபோன்று தேனி மாவட்டத்தில் பல்வேறு சமூகப் பொறுப்புகளில் சிறப்பாக ஈடுபாட்டுடன் பணியாற்றிய அரசு பள்ளி ஆசிரியர்கள் உட்பட சுமார் 80-க்கும் மேற்பட்டோருக்கு சமூக சேவகர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த விருதினை பெற்ற சமூக சேவகர் குறிஞ்சிமணி கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மனிதநேய காப்பக ஆதரவற்ற குழந்தைகளுக்கு தொடர்ந்து உணவு மற்றும் நிதியுதவிகளை வழங்கி வருகிறார்.
குறிப்பாக, உலகையே அச்சுறுத்திய கொரோனா பேரிடர் மற்றும் ஊரடங்கு காலத்தில், போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களிலும், போக்குவரத்து வசதிகளற்ற அடர்ந்த மலைக் கிராமங்களான குரங்கணி, டாப் ஸ்டேஷன், சென்ட்ரல் ஸ்டேஷன், கொட்டக்குடி, நரிப்பட்டி, முதுவாக்குடி, முட்டம், மேலப்பரவு, சோலையூர், சிறைக்காடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மலைப் பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மற்றும் பட்டியலின மக்களுக்கு தனது சொந்த செலவில் நேரடியாக சென்று, ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய மளிகை பொருட்களை தொடர்ந்து வழங்கி அவர்களின் பசிப்பிணியை போக்கினார். 

இக்கட்டான பேரிடர் காலத்தில் அவர் ஆற்றிய இந்த அசாத்திய நற்பணியின் அடிப்படையிலேயே, சமூக சேவைக்கான இந்த உயரிய விருதுக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டார் என உலக அமைதி குழுவினர் தெரிவித்தனர். விழாவில் போடி தொகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த உலக அமைதி தின விழா நிகழ்ச்சிகளை மனிதநேய காப்பக நிறுவனர் பால்பாண்டி தலைமையில் உலக அமைதி குழுவினர் செய்திருந்தனர். 
................................
K.நாகராஜ், தலைமை நிருபர் 

Comments