தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்து மக்கள் கட்சி தொண்டரணி தமிழக அரசுக்கு கோரிக்கை
தேனி, செப்.17-
இந்து மக்கள் கட்சி தொண்டரணி மாநில துணைத்தலைவர் குரு ஐயப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதும், இதுவரை 15,933-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியும் மிகுந்த அதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் அளிக்கிறது.
குறிப்பாக சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் 70 முதல் 100 பேர் வரை பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வரும் இந்த இக்கட்டான சூழல் பொதுமக்களிடையே, குறிப்பாக குழந்தைகளை கொண்ட பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பக்கம் மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், தேங்கி நிற்கும் குடிநீர், சுகாதாரமற்ற சூழல், முறையாக அகற்றப்படாத குப்பைகள் போன்றவற்றால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி இந்த நோய் வேகமாக பரவி வருகிறது. அரசு மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான செலவை சாமானிய மக்களால் சமாளிக்க முடியவில்லை என்ற குமுறலும் எழுந்துள்ளது.
இந்த இக்கட்டான நிலையை கருத்தில் கொண்டு இந்து மக்கள் கட்சி தொண்டர் அணி சார்பாக தமிழக அரசுக்கு கோரிக்கையை முன்வைக்கிறோம். மக்களின் உயிர் காக்கும் இந்த விஷயத்தில் தமிழக அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும்.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு டெங்கு காய்ச்சல் முகாம்களை அமைத்து, போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்துகள் மற்றும் ரத்த தட்டுக்களின் இருப்பை உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் அரசு செலவிலேயே முழுமையான, தரமான சிகிச்சை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அதேபோல் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி தோறும் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். தேங்கியுள்ள தண்ணீரில் மருந்து தெளித்தல், மாலை நேரங்களில் முறையாக புகை மருந்து அடித்தல், குப்பைகளை தினமும் முறையாக அகற்றுதல் போன்ற பணிகளை அதிகாரிகள் நேரடியாக களத்தில் இறங்கி கண்காணிக்க வேண்டும். மேலும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் டெங்குவை தடுப்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை பரவலாக மேற்கொள்ள வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கி, அவர்களுக்கு ஆறுதல் அளிக்க வேண்டும் என்றும், இனி ஒரு உயிர் கூட டெங்கு காய்ச்சலுக்கு பலியாகாமல் தடுக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி தொண்டர் அணி சார்பாக கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
..................................
நாகராஜ், தலைமை நிருபர்



Comments