தேனி உழவர் சந்தையில் நகராட்சி சார்பில் விவசாயிகள், பொதுமக்களுக்கு இலவசமாக உரம் வழங்கும் மையம் தொடக்கம்
தேனி, செப்.11-
தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் உள்ள 33 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் 4 வகைகளாக தரம் பிரிக்கப்பட்டு ஈர கழிவுகள் பொம்மையகவுண்டன்பட்டி வாட்டர் டேங்க், பழைய கம்போஸ்ட், தேனி மேற்கு சந்தை, தேனி புதிய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நுண்ணுற கூடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு ஈர கழிவுகள் இயந்திரங்கள் மூலம் 10 mm-ல் இருந்து 30 mm வரை சிறு துகள்களாக வெட்டப்பட்டு அவை அங்கு அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் கொட்டப்பட்டு திறன் மிகு நுண்ணுயிர் திரவம் தெளிக்கப்பட்டு 45 நாட்கள் தொட்டியில் கிளறி பராமரித்து 46-வது நாள் உரமாக மாற்றப்படுகிறது.
அவ்வாறு மாற்றப்படும் உரம் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தேனி உழவர் சந்தையில் காய்கறி கழிவுகளை பிரித்து வழங்குவதை அதிகப்படுத்தும் நோக்கிலும், உரத்தினை அனைவரும் பயன்படுத்த ஏதுவாக நகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில் தேனி உழவர் சந்தையில் இலவச உரம் வழங்கும் மையம் செயல்பட தொடங்கியது .
இந்த உரம் வழங்கும் தொடக்க நிகழ்வில் நகராட்சி நகர் நல அலுவலர் கவிபிரியா, சுகாதார அலுவலர் செபஸ்டின், சுகாதார ஆய்வாளர்கள் ஜெயச்சந்திரன், அலெக்ஸ் உள்பட விவசாயிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
எனவே உரம் தேவைப்படும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு தேவையான அளவு உரத்தினை பெற்றுக்கொள்ளலாம் என சுகாதார அலுவலர் செபஸ்டின் தெரிவித்துள்ளார்.
...................................
நாகராஜ், தலைமை நிருபர்





Comments