Skip to main content

தேனியில் முதலமைச்சர் கோப்பை 2026-க்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் துவக்கி வைத்தார்

தேனி, செப்.10-
தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பை 2026-க்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன். பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் முன்னிலையில் 9.9.2026 அன்று துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் என அனைவரும் பங்கேற்கும் வகையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்த ஆண்டு வெவ்வேறு புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டு 5 பிரிவுகளில் மாவட்ட அளவில் 17 விளையாட்டு போட்டிகள், மண்டல அளவில் 7 விளையாட்டு போட்டிகள் மற்றும் மாநில அளவில் 37 வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. தேனி மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க மொத்தம் 52,000 பேர்கள் பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டைவிட 9.285 பேர்கள் கூடுதலாக பதிவு செய்துள்ளார்கள்.

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க மாவட்ட அளவிலான தடகளம், சிலம்பம், கைப்பந்து, கையுந்து பந்து கால்பந்து, கபடி, கோ-கோ, கூடைப்பந்து வளைகோல் பந்து நீச்சல், ஓட்டப்பந்தயம், செஸ், கேரம். கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் 9.9.2026 முதல் 25.9.2026 வரை தேனி மாவட்ட விளையாட்டு மைதானம் மற்றும் ஆயுதப்படை மைதானத்தில் (கிரிக்கெட், கூடைப்பந்து) நடைபெற உள்ளது.

அதனடிப்படையில் இன்றைய தினம், மாவட்ட கலெக்டர் அவர்கள் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்து, போட்டிகளில் வெற்றிபெற மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

மாவட்ட அளவில் நடைபெறும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.
மாவட்ட மற்றும் மண்டல அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு (தனிநபர் மற்றும் குழுப்போட்டிகள்) முதல் பரிசாக தலா ரூ.3000/- இரண்டாம் பரிசாக தலா ரூ.2000/- மூன்றாம் பரிசாக தலா ரூ.1000/- வழங்கப்படும். மாநில அளவிலான தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும். இரண்டாம் பரிசாக ரூ.75,000/ மூன்றாம் பரிசாக ரூ.50,000/- மற்றும் குழு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.75,000/ இரண்டாம் பரிசாக ரூ.50,000/- மூன்றாம் பரிசாக ரூ.25,000/-வழங்கப்படும். மாநில அளவில் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுத்தொகையுடன் முதலமைச்சர் கோப்பை வழங்கப்படும்.

மேலும், மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் Bonafide Certificate அல்லது School/College ID card மாற்றுத்திறனாளிகள் எனில் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை (ID card) பொதுப் பிரிவில் கலந்து கொள்ள உள்ள வீரர் வீராங்கனைகள் இருப்பிடச் சான்றிதழ், அரசு ஊழியர்கள் தங்களுக்கான அலுவலக அடையாள அட்டை(Department ID cand), மேலும் போட்டிகளில் பங்கேற்க உள்ள அனைவரும் தங்களின் ஆதார் கார்டு மற்றும் வங்கி கணக்கு புத்தக நகலினை கட்டாயம் கொண்டு வருதல் வேண்டும். மேலும் கூடுதல் தகவலுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை நேரிலோ அல்லது 04546-253090 அல்லது 74017 03505 என்ற தொலைப்பேசி எண்ணிலோ (வேலை நேரங்களில்) தொடர்பு கொள்ளலாம்.


முன்னதாக விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் ஜோதியினை ஏற்றி வந்து மாவட்ட கலெக்டர் அவர்களிடம் வழங்கியதுடன், அனைத்து விளையாட்டு வீரர்களும் விளையாட்டு போட்டிகளில் நேர்மையாக பங்கெடுத்து கொள்கிறோம் என உறுதி மொழி ஏற்றக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அவர்கள் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குபேந்திரன். முதன்மை கல்வி அலுவலர் குபேந்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவக்குமார் மற்றும் விளையாட்டு ஆசிரியர்கள், விளையாட்டு நடுவர்கள், விளையாட்டு வீரர்கள் உள்பட பலர்கலந்து கொண்டனர்.
.............................
நாகராஜ், தலைமை நிருபர் 

Comments