முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல் போக சாகுபடி மற்றும் குடிநீருக்காக 350 கன அடி தண்ணீர் திறப்பு: தேனி மாவட்ட கலெக்டர் வைத்திநாதன் திறந்து வைத்தார்
தேனி, ஆக.8-
தேனி மாவட்டம், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து இன்று (8.8.2026) நீர்வளத்துறை சார்பில், கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக சாகுபடிக்காகவும், குடிநீர் தேவைக்காகவும் மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் தண்ணீரை திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல்போக சாகுபடிக்கு 14,707 ஏக்கர் நிலங்களுக்கு வினாடிக்கு 200 கன அடி வீதமும், தேனி மாவட்டம் மற்றும் மதுரை மாநகராட்சி குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 150 கன அடி வீதமும் என மொத்தம் வினாடிக்கு 350 கன அடி தண்ணீர் இன்று முதல் 120 நாட்களுக்கு நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பொறுத்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதன்மூலம் கம்பம் பள்ளத்தாக்கு ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள 14,707 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். எனவே தேனி மாவட்டத்தை சார்ந்த விவசாயப் பெருங்குடி மக்கள் இந்நீரை சிக்கனமாக பயன்படுத்தி குறுகிய காலப் பயிர்களை நடவு செய்தும், நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் தேனி பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார், வருவாய் கோட்டாட்சியர் (உத்தமபாளையம்) சையது முகைதீன் இப்ராஹிம், செயற் பொறியாளர்கள் (பெரியாறு வைகை வடிநில கோட்டம்) சிவப்பிரபாகர், சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் (பெரியாறு அணை, கம்பம்) செல்வம், உதவி செயற் பொறியாளர்கள் மல்லிகா, ராஜகோபால், வட்டாட்சியர் (உத்தமபாளையம்) பாலசண்முகம் உள்பட அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
..............................
நாகராஜ், தலைமை நிருபர்



Comments