Skip to main content

தேனி புலிகள் காப்பகம் என்ற பெயரில் 98 மலை கிராம மக்களை வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற கூடாது: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனுவை தாக்கல் செய்ய வலியுறுத்தி தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம்


தேனி, ஆக.7-
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட  8 ஊராட்சிகளில் உள்ள 98 மலை கிராமங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. 
இதனைத்தொடர்ந்து அந்த பகுதி மக்களை வெளியேற்றும் முயற்சியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. 

இதனை கண்டித்து வன கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு அக்கிராம மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் 7.8.2026 அன்று ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் டி.கண்ணன் தலைமை வகித்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் கே.பாலபாரதி, மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவர் பி.டில்லி பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் கலந்து கொண்டு பேசியதாவது, 98 மலை கிராம மக்களை வெளியேற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்து நிறுத்த வேண்டும். வன உரிமை சட்டப்படி அங்கு வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். அதுவரை அவர்களை அப்புறப்படுத்த கூடாது. வனத்துக்குள் மலை மாடுகள் மேய்ச்சலுக்கு அனுமதிக்க வேண்டும் என்று பேசினார்.
இதனைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தேனி எம்.பி, தங்க தமிழ்செல்வன் பேசுகையில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பை உடனடியாக அமல்படுத்துகிறேன் என்று வனத்துறையினர் மலைவாழ் மக்களை வெளியேற்ற கூடாது, மீறி வெளியேற்றினால் எனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்வேன் என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர் வக்கீல் எம்.கே.எம் முத்துராமலிங்கம், தமிழக வெற்றிக் கழக தெற்கு மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி, ஆண்டிபட்டி எம்.எல்.ஏ மகாராஜன்,  தேனி அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர் உள்பட த.வெ.க., திமுக., அதிமுக. அமமுக, கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் உள்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் மற்றும் 98 மலைவாழ் கிராம மக்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மலை கிராம மக்களின் போராட்டத்தினால் தேனி-மதுரை சாலை பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போராட்டத்துக்கு பின்னர் கோரிக்கை மனுவை தேனி மாவட்ட கலெக்டர் இரா.வைத்திநாதனிடம் வழங்கினர்.
................................
நாகராஜ், தலைமை நிருபர் 


Comments