தேனி அரசு ஐ.டி.ஐ அருகே செல்லக்கூடிய திட்டச்சாலையை திறக்க கோரி நகராட்சி கவுன்சிலர் கிருஷ்ண பிரபா அய்யப்பன் மாவட்ட கலெக்டரிடம் மனு
தேனி, ஆக.31-
தேனி அல்லிநகரம் நகராட்சி 5-வது கவுன்சிலர் கிருஷ்ண பிரபா அய்யப்பன், தேனி மாவட்ட கலெக்டர் வைத்திநாதனிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, தேனி மாவட்டம், தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் புதிய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை சாலை மார்க்கமாக செல்லக்கூடிய பஸ்கள், பேருந்து நிலையத்தின் கிழக்கு பகுதியில் உள்ள திட்டச்சாலை வழியாக இயங்கி கொண்டிருந்தது. இந்நிலையில் தேனி அரசு ஐடிஐ அருகே பஸ்கள் மற்றும் வாகனங்கள் செல்லும் திட்டச்சாலை தற்போது மூடப்பட்டுள்ளது.
அந்த திட்டச்சாலை மதுரை ரோட்டில் மேம்பால பணிகள் நடைபெற்ற போது நகராட்சி நிர்வாகத்தால் அரசினர் தொழிற்கல்வி நிலையத்தின் சுற்றுச்சுவரை இடித்து பொதுமக்கள் நலன் கருதி நகராட்சி நிதி மூலம் திட்டச்சாலை துவக்கப்பட்டு இயங்கி வந்தது. 2026-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பிருந்தே திட்டச்சாலை மூடப்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மண் மேடு உயர்த்தி பாதை இல்லாமல் உள்ளது. மதுரை சாலை வழியாக வாகனங்களில் செல்வோர் மற்றும் அரசினர் தொழிற்கல்வி நிறுவனத்திற்கு செல்வோரும் போக்குவரத்து இடையூறால் திட்டச்சாலை வழியாக தான் சென்று வந்தனர். தற்போது திட்டச்சாலை வழியாக செல்ல இயலாததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
மேலும் தேனியில் போக்குவரத்து அதிகளவில் இருப்பதால் திட்டச்சாலைகள் அனைத்தையும் பயன்பாட்டிற்கு கொண்டுவர நகர்மன்ற கூட்டத்தில் நடைபெற்ற விவாதத்தின் நகலையும் இத்துடன் இணைத்துள்ளேன். மேலும் கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலைய திட்டச்சாலையை அடைத்தால் மேம்பால பணிகள் நடைபெறும் பொழுது மதுரைக்கோ அல்லது க.விலக்கு மருத்துவமனைக்கோ செல்வதற்கு வாகனங்கள் பெரியகுளம் வழியாக தான் செல்லும் நிலைமை ஏற்படும்.
எனவே வேறு மாற்று பாதை இல்லாத சூழ்நிலை காரணமாக பல கிலோ மீட்டர்கள் சுற்றி செல்லும் அவல நிலை ஏற்படுகின்ற காரணத்தால் மக்கள் நலனை கருத்தில் கொண்டு, மீண்டும் கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையத்தின் கிழக்கு பகுதியில் செல்லும் திட்டச்சாலையில் அரசு ஐடிஐ அருகே செல்லக்கூடிய திட்டச்சாலையை பயன்பாட்டிற்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
..................................
நாகராஜ், தலைமை நிருபர்





Comments