Skip to main content

தேனி அருகே பட்டா நிலங்களை அபகரித்து விட்டதாக பொதுமக்கள் கலெக்டரிடம் புகார் மனு

 

தேனி, ஆக.20-
தேனி அல்லிநகரம் நகராட்சி கவுன்சிலர் கிருஷ்ண பிரபா அய்யப்பன் மற்றும் முன்னாள் கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று கொடுத்துள்ளனர் அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது,

தேனி மாவட்டம், தேனி தாலுகா, ஊஞ்சாம்பட்டி கிராமத்தில் உள்ள ரேணுகா நகரில் இருக்கும் நிலங்கள் முன்னாள் ராணுவ வீரர் மாணிக்கவாசகன், முத்து பேச்சி, ராமசாமி உள்பட 15 பேர்களுக்கு சொந்தமான நிலங்களாகும். இந்த நிலங்களை ஒண்டிவீரன் காலனியை சேர்ந்த ராஜன் என்பவருடைய மகன் அலெக்ஸாண்டர் எவ்வித ஆவணங்களும் இல்லாமல் அது தன்னுடைய நிலம் என்று சொல்லி, நிலத்தை அபகரித்து வேலி அமைத்து மணல் திருட்டு வேலை செய்து வருகிறார். 

மேலும் 10-க்கும் மேற்பட்ட ஆட்களை வைத்து கொண்டு பொக்லைன் மூலம் முள்வேலிகளை உடைத்து அத்துமீறி உள்ளே நுழைந்து 15 பேர்களின் நிலங்களான 9 ஏக்கருக்கும் மேல் உள்ள நிலங்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சி செய்து நில அபகரிப்பு செய்து வருகிறார்.
அந்த சர்வே எண்களுக்கு கட்டுப்பட்ட நிலம் பஞ்சமி நிலமோ அல்லது கள்ளர் ஜாதி நிலமோ அல்லாத பட்டா நிலங்களாகும். அந்த நிலங்களுக்கு 15 பேர்களும் தனியாக பத்திரம் மற்றும் தனி பட்டா போன்ற ஆவணங்களும் வைத்துள்ளனர். இந்நிலையில் அலெக்ஸாண்டர் என்பவர் பணம் பறிக்கும் நோக்கில், நான் உங்களை கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியும், நீங்கள் என்னை ஜாதி பெயரை சொல்லி பேசியதாக பி.சி.ஆர்-ல் பொய் கேஸ் போட்டு விடுவேன் என்றும், உள்ளே வந்தால் வெட்டுவேன் என்று அருவருக்கத்தக்க வார்த்தைகளால் நிலத்திற்கு சொந்தமானவர்களை மனம் வருந்தும் படி பேசி விட்டார். 

இதுகுறித்து அலெக்ஸாண்டர் என்பவரை விசாரித்து எங்களுக்கு எங்களது நிலம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இந்த பிரச்சனை குறித்து அல்லிநகரம் போலீஸ் நிலையம் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவிலும் மனு கொடுத்துள்ளோம். 

எனவே மாவட்ட கலெக்டர் அவர்கள் நிலத்திற்கு சொந்தமான 15 பேர்களின் ஆவணங்களின் அடிப்படையில் உள்ள (பட்டா, சிட்டா, பத்திரம்) ஆதாரங்களை பார்வையிட்டு, மணல் திருட்டு சம்பந்தமாகவும் நில அபகரிப்பு தொடர்பாகவும் மற்றும் அரசுக்கு ஒப்படைக்கப்பட்ட அனைத்து பாதைகளை வேலி கொண்டு அடைத்து வைத்துள்ள சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டுள்ள 15 பேர்களின் நிலங்களை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
.................................
நாகராஜ், தலைமை நிருபர் 



Comments