Skip to main content

வைகை அணை நீர்தேக்க பகுதியில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் எடுத்து சென்ற பைப் லைன்கள் அகற்றம்

தேனி, ஆக.11-

தேனி மாவட்டத்தில் நீர் நிலைகளில் இருந்து சட்ட விரோதமாக மின்மோட்டார் மூலம் தண்ணீர் எடுப்பதை தடுக்கும் வகையில் வருவாய்த்துறை, காவல்துறை, நீர்வளத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை ஆகிய துறைகளின் அலுவலர்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டு, நீர்நிலைகளில் ஆய்வு மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் அவர்களால் அறிவுறுத்தப்பட்டு, தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் 10.8.2026 அன்று கோவில்பட்டி, சண்முகசுந்தரபுரம் வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், நீர்வளத்துறை அலுவலர்களின் கள ஆய்வின்போது, வைகை அணை நீர்த்தேக்கப்பகுதியிலிருந்து சட்டவிரோதமாக தனி நபர்கள் மூலம் நீர் எடுத்துச் செல்லும் பைப் லைன்கள், ஏர் வெண்டுகள் கண்டறிப்பட்டதை தொடர்ந்து, அவற்றை உடனடியாக ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டது.
மேலும், இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.................................
நாகராஜ், தலைமை நிருபர் 

Comments