Skip to main content

தேனி வாரச்சந்தையில் கட்டப்பட்டு வரும் கடைகளின் கட்டுமான பணி 100 சதவீதம் தரமற்றதாக உள்ளது: நகராட்சி கூட்டத்தில் துணைத்தலைவர் செல்வம் குற்றச்சாட்டு

தேனி, ஜூலை.31-

தேனி அல்லிநகரம நகராட்சி கூட்டம் நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன் தலைமையில் 31.7.2026 அன்று நடைபெற்றது. நகர் மன்ற துணைத்தலைவர் செல்வம், ஆணையாளர் பார்கவி, பொறியாளர் குணா, நகர் நல அலுவலர் கவிப்பிரியா, சுகாதார அலுவலர் செபாஸ்டின் ஜோசப், நகர அமைப்பு ஆய்வாளர் சலீம், நிர்வாக அலுவலர் பொறுப்பு முனிராஜ், நகராட்சி கவுன்சிலர்கள் கடவுள், நாராயண பாண்டியன், அய்யனார், நாகராஜ், கிருஷ்ண பிரபா அய்யப்பன், ஆனந்தி விஜயகுமார், ஜெயா காசிமாயன், கிருஷ்ணகுமாரி, பாப்பா மற்றும் பார்வையாளராக பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் உள்பட நகராட்சி அலுவலர்கள்,, கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் போது 57 கூட்டப்பொருள் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையே கவுன்சிலர்கள் தங்களது வார்டு பகுதியில் உள்ள குறைகள், கோரிக்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து விளக்கி பேசினர்.

அப்போது துணைத்தலைவர் செல்வம் பேசுகையில் தேனி வாரச்சந்தையில் கட்டப்பட்டு வரும் கடைகளின் கட்டுமான பணிகள் மிகவும் தரம் அற்றதாக உள்ளது. ஏனென்றால் கடைகளில் உள்ள சுவற்றை கையால் பிடித்து அழுத்தினால் கூட சுவர் உடைந்து வருகிறது. அதுபோல பாதாள சாக்கடை திட்ட பணி மிகவும் தரமற்ற முறையில் நடைபெற்று வருகிறது. ஏனென்றால் ஒரே நாளில் குழி தோண்டி மேன்ஹோல் கட்டப்பட்டு மூடப்படுகிறது. இப்படி செய்யப்படும் பணி எப்படி ஆண்டாண்டு காலத்திற்கு உழைக்கும்.

அதுபோல நகராட்சி பகுதியில் குப்பைகள் சரிவர அகற்றப்படுவதில்லை. ஆங்காங்கே தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. தேனியில் உள்ள எரிவாயு தகன மேடை மயானத்தில் பிரேதங்களை எரிக்க கூடுதலாக பணம் வசூல் செய்யப்படுகிறது. நகராட்சி அலுவலகத்திற்கு பொதுமக்கள் குறைகளை கூற வருகை தந்தால் கேட்பதற்கு உரிய அதிகாரிகள் யாரும் இல்லை. அலுவலகத்தில் இருப்பவர்களிடம் விவரம் கேட்டால் அதிகாரிகள் மீட்டிங் சென்று உள்ளார்கள் என்று கூறி விடுகின்றனர். அப்படி என்றால் நகராட்சி அலுவலக கேட்ட பூட்டி விட்டு செல்லலாமே பிறகு எதற்காக அலுவலகம் திறந்தே கிடைக்க வேண்டும்.

மேலும் மூன்று கூட்டத்திற்கு வராத கவுன்சிலர் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை கவுன்சிலர்கள் கையெழுத்து போடும் நோட்டில் தில்லு முள்ளு உள்ளது. இதனை நான் வெளிப்படையாக கூற விரும்பவில்லை என்றார்.

இதுபோன்று பல்வேறு கோரிக்கைகளை கூட்டத்தில் நான் உள்பட கவுன்சிலர்கள் கூறி வருகிறோம் இதில் ஒன்று நிறைவேற்றப்பட்டால் கூட கிடாவெட்டி அனைவருக்கும் சோறு போடுவேன். 

இதனைத்தொடர்ந்து நகராட்சி கூட்ட அரங்கில் தற்போதைய முதல்வர் படம் மட்டும் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஸ்டாலின் படம் ஏன் வைக்கப்படவில்லை. தற்போது நடைபெற்று கொண்டிருக்க கூடிய திமுக தலைமையிலான நகர சபையில் ஏன் முன்னாள் முதல்வர் படம் இல்லை என்று திமுக கவுன்சிலர்கள் கோரிக்கை எழுப்பினர் இதற்கு அதிமுக கவுன்சிலர்கள் எங்கள் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் படத்தையும் கூட்ட அரங்கில் வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனால் கவுன்சில் கூட்டத்தில் திடீர் அமளி ஏற்பட்டு பரபரப்பானது. இதற்கிடையே காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் தங்களது கட்சிகளை சேர்ந்த முன்னாள் முதல்வர் படத்தை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 

இந்நிலையில் கவுன்சிலர்களை அமைதிப்படுத்தி பேசிய பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் நகராட்சி கூட்ட அரஙகில் எந்தெந்த தலைவர்கள் படத்தை வைக்க வேண்டும் என்பதை நகர சபையே முடிவெடுத்து கொள்ளவும் அதில் நான் குறுக்கிட விரும்பவில்லை. தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் குப்பைகள் சரிவர அள்ளுவதில்லை அதனை நானும் புகாராக வைக்கிறேன். 33 கவுன்சிலர்களுடன் சேர்ந்து நானும் குப்பை அகற்றுவதற்கு செய்ய வேண்டிய வேலைகளை செய்ய தயாராக உள்ளேன். அதுபோல குடிநீர் பிரச்சனை மற்றும் எந்த பிரச்சனைகளாக இருந்தாலும் கவுன்சிலர்கள் கோரிக்கையாக என்னிடம் தெரிவித்தால் சட்டமன்ற உறுப்பினர் அடிப்படையில் தீர்க்கக்கூடிய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கு தயாராக உள்ளேன். அதுபோல கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் தங்களது கோரிக்கைகள் குறித்து பேசுவதற்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றார்.

இதனைஅடுத்து நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன் பேசுகையில் தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதிக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு மின்வெட்டு தான் முக்கிய காரணமாக உள்ளது. இதனால் தண்ணீர் வினியோகம் செய்வதில் பிரச்சனை ஏற்படுகிறது இந்த மின்வெட்டை சரி செய்து தர உரிய வழிவகை செய்ய வேண்டும் என்றார்.

இதற்கிடையே கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் போது திமுக கவுன்சிலர்கள் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் படத்தையும், அதிமுக கவுன்சிலர்கள் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா படத்தையும், காங்கிரஸ் கவுன்சிலர் முன்னாள் முதல்வர் காமராஜர் போட்டோவையும் கூட்ட அரங்கில் மாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

................................

நாகராஜ், தலைமை நிருபர் 

Comments