தேனி, ஜூலை.27-
தேனி மாவட்டம் தேனி-அல்லிநகரம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான அரசு சேவைகள் மற்றும் நலத்திட்ட சிறப்பு வசந்த மகால் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமினை மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் க.சபரி ஐங்கரன் முன்னிலையில் நேரில் பார்வையிட்டார்.
தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாக இயக்குநரகம், தேனி-அல்லிநகரம் நகராட்சி சார்பில், தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு சேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடையும் வகையில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இம்முகாமில் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியத்திற்கான உறுப்பினர் பதிவு, திருமண உதவி. விபத்து நிவாரணம், மகப்பேறு உதவி. கல்வி உதவித்தொகை. வாழ்வாதார உதவி திட்டங்கள், இயற்கை மரணம். பணியின்போது உயிரிழப்பு ஆகியவற்றிற்கான நிவாரணம் கோரும் விண்ணப்பப் பதிவு சேவைகள், மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், பொதுமருத்துவ பரிசோதனை. தொழுநோய் பரிசோதனை உள்ளிட்ட சுகாதார சேவைகள், ஆதார் பதிவு திருத்தம், குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுக்கான விண்ணப்பங்கள் மற்றும் கல்வி மற்றும் திறன் மேம்பாடு தொடர்புடைய கல்வி உதவித்தொகை, திறன் மேம்பாட்டு பயிற்சிகள், மாற்று வாழ்வாதார பயிற்சிகள் ஆகியவைகள் வழங்கப்படுகின்றன.
இம்முகாமில் தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான அரசு சேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பான சேவைகள் வழங்கிடும் பொருட்டு நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை, சமூக நலத்துறை, தாட்கோ. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம். தொழிலாளர் துறை. ஆதார் சேவை மையம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த காட்சியரங்குகளை மாவட்ட கலெக்டர் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
மேலும், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் பொது மருத்துவ பரிசோதனை, தொழுநோய் பரிசோதனை, காசநோய் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சுகாதார சேவைகள் வழங்கப்பட்டு, மருந்துகள் வழங்கப்பட்டது. கண் பரிசோதனை முகாமும் நடத்தப்பட்டு, உரிய மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.
இதற்கிடையே இந்த முகாமில், தூய்மைப் பணியாளருக்கான உறுப்பினர் அடையாள அட்டை, கல்வி உதவித்தொகை திருமண உதவித்தொகை, ஆதார் அட்டை, இலவச வீட்டுமனைப் பட்டா, மாதாந்திர உதவித்தொகை, கல்விக்கடன், திறன்மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் அடுக்குமாடி வீடு குடியிப்புக்கான ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 215 மனுக்கள் தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது.
மேலும், மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 முன்னிட்டு முதற்கட்டமாக நடைபெற்றுவரும் சுய கணக்கெடுப்பு விவரங்களை பொதுமக்கள் தாங்களாகவே secensusgov.in என்ற இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து உதவி மையம் (Help Desk) அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த முகாமில், தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன். நகராட்சி ஆணையர் பார்கவி, நகர் மன்ற துணைத்தலைவர் செல்வம், நகர் நல அலுவலர் கவிப்பிரியா, சுகாதார அலுவலர் செபாஸ்டின் ஜோசப் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், நகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பல்வேறு அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
...........................
நாகராஜ், தலைமை நிருபர்






Comments