தேனி பழைய அரசு மருத்துவமனை அருகே வனத்துறை இடத்தில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க வேண்டும்: இந்து எழுச்சி முன்னணி சார்பில் நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு
தேனி, ஜூலை.23-
தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி சார்பில் மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி தலைமையில், தேனி அல்லிநகரம் நகராட்சியின் 14-வது வார்டு கவுன்சிலர் நாகராஜ் (காங்கிரஸ்) அவர்களிடமும், தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் அவர்களிடமும் பொதுநலன் கருதி மனு ஒன்று வழங்கப்பட்டது.
அந்த மனுவில், தேனி பழைய அரசு மருத்துவமனை (Old G.H.) சாலையின் வடபுறத்தில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சிலர் தொடர்ந்து குப்பைகளை கொட்டி வருவதால், அப்பகுதி முழுவதும் சுகாதாரமற்ற சூழல் நிலவி வருகிறது, இதனால் பொதுமக்களின் உடல்நலத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இதன் காரணமாக இரண்டு நாட்களுக்கு முன்பு வனத்துறையினர் அங்கு குப்பைகளை புதைப்பதற்காக குழி தோண்டும் பணியில் ஈடுபட்டபோது, அந்தக் குழி பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் விபத்து அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டாம் என்று இந்து எழுச்சி முன்னணி சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதனைஅடுத்து, வனத்துறை அலுவலர், ஒரு வார கால அவகாசம் வழங்கப்படுகின்றது. அதற்குள் தற்போது குவிந்துள்ள குப்பைகள் முழுமையாக அகற்றப்பட வேண்டும். மேலும், இனி யாரும் அந்த இடத்தில் குப்பை கொட்டாத வகையில் நகராட்சி நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
அதன் அடிப்படையில், தேனி அல்லிநகரம் நகராட்சி நிர்வாகத்திடம் கீழ்க்கண்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன:
- வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் தற்போது குவிந்துள்ள அனைத்து குப்பைகளையும் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எதிர்காலத்தில் அந்த இடத்தில் யாரும் குப்பை கொட்டாத வகையில் எச்சரிக்கை பலகைகள் அமைத்து, தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
- அப்பகுதியின் சுகாதாரத்தையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை பெற்றுக்கொண்ட நகராட்சி அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.
இந்த நிகழ்வின் போது தேனி மாவட்ட சிறு பலசரக்கு வியாபாரிகள் நலச் சங்கத்தின் மாவட்ட செயலாளர் A.L. ஆத்தியப்பன், இந்து எழுச்சி முன்னணி தேனி மாவட்ட தலைவர் இராமராஜ், மாவட்ட இணை அமைப்பாளர் செல்வபாண்டியன் உள்பட பலர் உடனிருந்தனர்.
...............................
நாகராஜ், தலைமை நிருபர்


Comments