கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை ஒன்றிய பகுதியில் வனத்துறையின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்: தேனி கலெக்டரிடம் அதிமுக மாவட்ட செயலாளர் கோரிக்கை மனு
தேனி, ஆக.1-
தேனி மாவட்ட கலெக்டர் வைத்திநாதனிடம் தேனி அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர் தலைமையில் வழக்கறிஞர் அணி டி.கே.ஆர். கணேசன் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது,
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றிய பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை பகுதியில் புலிகள் காப்பகமாக மாற்றி அரசானை பிறப்பிக்கப்பட்டது. இது சம்பந்தமாக உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் வனத்துறையினர் கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றிய பகுதிகளில் கடந்த 3 தலைமுறைகளாக குடியிருந்து விவசாயம் செய்துவரும் மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதனால் சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களின் வீடு, விவசாய நிலங்கள் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வனத்துறையினர் நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி பொதுமக்களை வெளியேற்றும் எண்ணத்துடன் பொதுமக்களுக்கும், பொது சொத்துக்களுக்கும் பல்வேறு இடஞ்சல் செய்தும் மிரட்டியும் வருகின்றனர். இதனால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
மேலும் உச்சநீதிமன்றம் அமைத்திருந்த குழுவினர் சரிவர கள ஆய்வு மேற்கொள்ளாமல் வனத்துறையினருக்கு ஆதரவாக அறிக்கை சுப்ரீம் கோட்டில் தாக்கல் செய்துள்ளதாக மக்கள் சந்தேகப்படுகின்றனர் எனவே சரியாக கள ஆய்வு மேற்கொள்ள சீராய்வு மனு அவசிமானதாகவும், நியாயமானதாகவும் உள்ளது.
ஆதலால் கலெக்டர் அவர்கள் கருணை கூர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் சம்பந்தமான உச்சநீதிமன்ற தீர்ப்பின் மேல் சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க தாங்கள் தகுந்த ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
.................................
நாகராஜ், தலைமை நிருபர்



Comments