Skip to main content

தேனி மாவட்டத்தில் அண்ணா கூட்டுறவு நூற்பாலையின் செயல்பாடுகள் குறித்து கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ம.விஜய் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு

 

தேனி, ஜூன்.24-

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம் க.விலக்கில் இன்று (24.6.2026) அண்ணா கூட்டுறவு நூற்பாலையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் மற்றும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா ஆகியோர் முன்னிலையில் தமிழக கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ம.விஜய் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் அவர்கள் அண்ணா கூட்டுறவு நூற்பாலையில் நடைபெற்று வரும் உற்பத்தி பணிகள், பருத்தி கொள்முதல் நடைமுறைகள், நூல் உற்பத்தி அளவு, இயந்திரங்களின் செயல்திறன், மின்சார பயன்பாடு மற்றும் பராமரிப்பு பணிகள் ஆகியன குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து, கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் அவர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு தெரிவிக்கையில், விலையில்லா வேட்டி-சேலை வழங்கும் திட்டம், பள்ளி சீருடை வழங்கும் திட்டம் மற்றும் பிரதம கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கு தேவையான நூல்கள் உற்பத்தி ஆகியன குறித்தும். கடந்த காலங்களில் நலிவுற்ற நிலையில் இருந்த இந்த நூற்பாலையினை மீட்டு அதிக அளவில் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதுடன், அண்ணா கூட்டுறவு நூற்பாலை இலாபத்தில் இயங்குகிறது என்ற நிலையை உருவாக்க என்னென்ன அடிப்படை வசதிகள் தேவையோ அவை அனைத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி செய்து தரப்படும் என்று கைத்தறி துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ம.விஜய் பாலாஜி தெரிவித்தார்.
அதுபோல அமைச்சர் அவர்கள் தொழிலாளர்களை சந்தித்து. அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்ததுடன், தொழிலாளர்களின் பணி நிரந்தரம் குறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
இந்த ஆய்வு நிகழ்வில், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ரஜத் பீடன், இணை இயக்குநர் (கைத்தறி, சென்னை) கிரிதரன். பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் (பொ) கவிதா, துணை இயக்குநர் (துணிநூல், மதுரை மண்டலம்) திருவாசகர், உதவி இயக்குநர் / செயலாட்சியர் சம்பத்குமார், வட்டாட்சியர் (ஆண்டிபட்டி) ஜாஹிர் உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
................................
நாகராஜ், தலைமை நிருபர் 
செல் - 9842145271

Comments