Skip to main content

பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் அமமுக வேட்பாளர் டாக்டர் கதிர்காமுக்கு குக்கர் சின்னத்திற்கு ஆதரவு கோரி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரசாரம்

தேனி, ஏப்.9-

தேனி மாவட்டம், பெரியகுளம் சட்டமன்ற தனி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் சார்பில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் டாக்டர் கதிர்காமு வேட்பாளராக போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன்  பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 9.4.2026 அன்று பிரசாரம் மேற்கொண்டார்.
தேனி பங்களா மேடு பகுதியில் தனது பிரச்சாரத்தை தொடங்கிய டிடிவி தினகரன் பேசுகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் அமமுக வேட்பாளராக இதே தொகுதியில் கடந்த 2016-ல் அம்மா அவர்களால் நிறத்தப்பட்டு ஏற்கனவே எம்.எல்.ஏ-வாகவும், 2 முறை சீட்டுக்கு போட்டியிட்ட டாக்டர் கதிர்காமு போட்டியிடுகிறார்.

பெரியகுளம் தொகுதியில் தற்போது திமுக எம்.எல்.ஏ., தான் உள்ளார் ஆனால் இந்த தொகுதியில் குறிப்பாக தேனியில் சுகாதார சீர்கேடு, அடிப்படை வசதிகள் கேள்விக்குறியாக உள்ளது. இதனை சரி செய்வதற்கு நீங்கள் அமமுக வேட்பாளரை ஆதரித்து குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சி தான். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து யாருக்கும் பாதுகாப்பு இல்லை. குறிப்பாக பெண்கள் மற்றும் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. அம்மாவின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லை. அந்த பொற்கால ஆட்சியை மீண்டும் கொண்டு வர அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். தேனி மாவட்டம் அம்மாவின் மாவட்டம். அதனால் எடப்பாடியார் தலைமையில் பாஜக, பாமக, தமாகா மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆதரவு வேட்பாளர்களை வெற்றி பெற செய்து தேனி மாவட்டம் அம்மாவின் கோட்டை என நிரூபிக்கும் விதமாக பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் கதிர்காமுக்கு குக்கர் சின்னத்திற்கும், ஆண்டிப்பட்டி, போடி, கம்பம் ஆகிய தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கும் வாக்களித்து மாபெரும் வெற்றி தேடித்தர வேண்டும். 
திமுகவின் மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவும், மீண்டும் அமைதியான தமிழகத்தை உருவாக்கவும் பொதுமக்கள் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும் என்று பேசி வாக்குகள் சேகரித்தார்.

இதனைத்தொடர்ந்து அல்லிநகரம், வடபுதுபட்டி, லட்சுமிபுரம் பெரியகுளம், வடுகபட்டி, கெங்குவார்பட்டி, ஜெயமங்கலம், குள்ளபுரம், தேவதானப்பட்டி, கொங்குவார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் குக்கர் சின்னத்திற்கு டிடிவி தினகரன் பிரசாரம் செய்தார்.
இந்த பிரச்சாரத்தின் போது அமமுக மாவட்டச் செயலாளர் காசிமாயன், தேனி நகர அமமுக செயலாளர் குரு கணேஷ், தேனி நகர அதிமுக செயலாளர் வக்கீல் கிருஷ்ணகுமார், தேனி நகர அதிமுக துணை செயலாளர் சுந்தரபாண்டியன், பெரியகுளம் நகர அதிமுக செயலாளர் பழனியப்பன், பெரியகுளம் ஒன்றிய அதிமுக செயலாளர்கள் அன்னபிரகாஷ் ஜெயராஜ், ராஜகுரு உள்பட அமமுக, அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
..............................
நாகராஜ், தலைமை நிருபர் 

Comments