திண்டுக்கல் குமுளி அகல ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த கோரி; தேனியில் இருந்து திண்டுக்கல் நோக்கி போராட்ட குழுவினர் நடைபயணம்: தேனி எம்.பி., தங்கதமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார்
தேனி, மார்ச்.24-
தேனி மாவட்ட மக்களின் 60 ஆண்டுகள் கோரிக்கையான திண்டுக்கல் முதல் குமுளி (லோயர் கேம்ப்) வரை அகல ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த கோரி போராட்ட குழு தலைவர் சங்கரநாராயணன் தலைமையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்நிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி தேனியில் இருந்து திண்டுக்கல் ரயில் நிலையம் வரை போராட்டக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் 2 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டனர். இதில் 23.3.2025 அன்று தேனி பங்களாமேடு பகுதியில் தொடங்கிய இந்த நடைபயணத்தை தேனி எம்.பி., தங்கதமிழ்செல்வன் கொடியசைத்து தொடங்கி வைத்து போராட்ட குழுவினருடன் ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்றார்.
இந்நிகழ்வில் ரயில் பாதை போராட்ட குழு தலைவர் சங்கரநாராயணன், பெரியகுளம் எம்.எல்.ஏ., சரவணகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., லாசர், மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் வக்கீல் MKM.முத்துராமலிங்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தேனி மாவட்ட தலைவர் செல்வகுமார், கவுரவ தலைவர் சந்திரகுமார், தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ராஜன், சமூக ஆர்வலர் சிதம்பரம் உள்பட ரயில் பாதை திட்ட போராட்ட குழுவினர், வர்த்தக பிரமுகர்கள், தி.மு.க-வினர், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் முதல் நாள் நடைபயணத்தின் போது தேனி அருகே உள்ள லட்சுமிபுரம் ஸ்ரீ சீரடி அன்ன சாய்பாபா கோவில் சார்பில் தலைவர் ராஜன் தலைமையில் ரயில் பாதை திட்டம் செயல்படுத்த கோரி நடைபயணம் மேற்கொண்டுள்ள போராட்ட குழு தலைவர் சங்கரநாராயணன் தலைமையிலான போராட்டக் குழுவினரை லட்சுமிபுரம் ரேணுகா வித்யாலயா பள்ளி அருகே வரவேற்று பிஸ்கட், நீர்மோர் வழங்கினர். அதுபோல முன்னாள் எம்.எல்.ஏ., கதிர்காமு போராட்டக் குழுவினரை வாழ்த்தி நடைபயணம் மேற்கொள்பவர்கள் தாகத்தை தீர்ப்பதற்காக தர்பூசணி பழங்கள் வழங்கினார்.
இந்நிலையில் திண்டுக்கல்-குமுளி அகல ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த கோரி மேற்கொண்ட நடை பயணம் இன்று மாலையில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் போராட்ட குழுவினர் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.
நாகராஜ், தலைமை நிருபர்
.........................
Comments