Skip to main content

தேனி நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா திடீர் ஆய்வு

தேனி மாவட்டம், தேனி நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கு  மற்றும் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையம், நியாய விலைக்கடை, அரசு துணை சுகாதார நிலையம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர்  ஆர்.வி.ஷஜீவனா 20.9.2023 அன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தேனி நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கில், இந்திய உணவு கழகத்திலிருந்து வரப்பெற்ற அரிசி மற்றும் கோதுமையின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டதுடன், நியாய விலைக்கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பொருட்கள் முறையாக நகர்வு செய்யப்படுகிறதா என்றும், சரியான எடை அளவில் கொண்டு செல்லப்படுகிறதா என்றும்  ஆய்வு செய்தார்.மேலும், அத்தியாவசிய பொருட்கள் இருப்பு பதிவேடு, காலி சாக்குகள் பதிவேடு, உள்வரும் வாகனங்கள் மற்றும் வெளி செல்லும் வாகனங்களை கண்காணிப்பதற்கான பதிவேடு, தரக்கட்டுப்பாட்டு பதிவேடு, எடை அளவு பதிவேடு, விற்பனை பதிவேடு, அரிசி மற்றும் கோதுமை நகர்வு பதிவேடு, அட்டியல் அட்டைகள் பதிவேடு உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடு, உள்நோயாளிகள் பிரிவில் உள்ள படுக்கை வசதி, புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வருகை தந்த பொதுமக்களின் எண்ணிக்கை, சிகிச்சை அளிக்கப்படும் விதம், மருந்து, மாத்திரைகளின் இருப்பு, மருந்து மாத்திரைகளில் அச்சிடப்பட்டுள்ள காலாவதியாவதற்கான காலம், கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியன குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இதனை அடுத்து பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியில் உள்ள நியாய விலைக்கடைகளின் விற்பனை முனைய இயந்திரங்களில் நடப்பு மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை, வழங்கப்பட வேண்டிய குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை, மீதமுள்ள பொருட்களின் இருப்பு, அரிசி மற்றும் பொருட்களின் தரம், எடை அளவு மற்றும் எடை அளவிடும் இயந்திரத்தில் முத்திரை பதிக்கப்பட்டுள்ள காலம், இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இதன்பின்னர் பேரூராட்சி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில், குழந்தைகளுக்கு அளிக்கப்படும் முறைசாரா முன்பருவ கல்வி,  எடை மற்றும் உயரம் அளவீடு செய்யப்பட்டு முறையாக பதிவேற்றம் செய்யப்படுகிறதா, ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா எனவும், அங்கன்வாடி மையத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்பருவ கல்வி உபகரண கருவி நல்ல முறையில் உள்ளதா, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் மற்றும் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களின் தரம்  ஆகியவை மற்றும் அங்கன்வாடி மையத்தில் பராமரிக்கப்படும் 11 வகையான பதிவேடுகள் ஆகியன குறித்தும் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா  திடீர் ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின் போது, நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ஆறுமுகம் உள்பட சம்மந்தப்பட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சதிஷ், இணை ஆசிரியர்

சிவபாலன், சிறப்பு நிருபர் 

Comments