மஞ்சளாறு அணை கரை பகுதியில் மண்ணரிப்பை தடுப்பதற்காக சோதனை முயற்சியாக போடப்பட்ட கயிறு வலைகள் : தேனி கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டார்
தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், மஞ்சளாறு அணை கரை பகுதியில் மண்ணரிப்பை தடுப்பதற்காக சோதனை முயற்சியாக நமது சூழலுக்கு உகந்த தென்னை நாரினால் செய்யப்பட்ட கயிறு வலைகளை கொண்டு மூடப்பட்டதன் மூலம் ஏற்படும் நன்மைகள் மற்றும் அதன் செயல்பாடுகளை மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுடன் 7.6.2023 அன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
மஞ்சளாறு அணை கரை பகுதியில் மண்ணரிப்பை தடுப்பதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக சோதனை முயற்சியாக, கரை பகுதி முழுவதும் தென்னை நாரினால் செய்யப்பட்ட கயிறு வலைகளை கொண்டு மூடப்பட்டது. இத்திட்டம் ஆறுமாதங்கள் கழித்தும் எந்தவித மண்ணரிப்புமின்றி சுற்றுத்சூழலுக்கு உகந்தது போல் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது. வெற்றிகரமாக செயல்பட்ட இத்திட்டத்தை ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளங்களில் மண்ணரிப்பை தடுப்பதற்காக சோதனை முறையில் பயன்படுத்துவதற்காக அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும், செயற் பொறியாளர்களுக்கும், பொறியாளர்களுக்கும் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கும் விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது.
தென்னை நாரினால் செய்யப்பட்ட கயிறு வலை போடப்பட்டதனால் ஏற்பட்ட நன்மைகள் குறித்தும், இறுக்கமான கயிறு வலை கட்டமைப்பு மண்ணை உறுதிப்படுத்துகிறது மற்றும் மண்ணரிப்பு கட்டுப்பாட்டுக்கு பயனுள்ளதாக உள்ளது. இதனை சாலை கட்டுமானம் மற்றும் கரையோர மண்ணரிப்பு கட்டுப்பாடு ஆகியவற்றில் பயன்படுத்த ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது .தென்னை நாரினால் செய்யப்பட்ட இந்த கயிறு வலைகள் 400 gsm, 700 gsm, 900 gsm, என மூன்று வகைகளில் (Coir Geotextile mat Rolls) கிடைக்கப்பெறுகிறது. இந்த பயிற்சியை தொடர்ந்து அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு குளத்தை தேர்வு செய்து சோதனை முயற்சியாக இந்த கயிறு வலைகளை பயன்படுத்தி அதன் செயல்பாடுகளை ஆராய வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுரைகளை வழங்கினார் .
அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மதுமதி, செயற் பொறியாளர் முருகன், உதவி பொறியாளர்கள் ரவிச்சந்திரன், ராஜேஷ்வரன், ஜோதி, வெங்கடேசன், மஞ்சளாறு வடிநில கோட்ட உதவி செயற்பொறியாளர் செளந்திரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
S.சசிதுரை சிறப்பு நிருபர்
Comments