Skip to main content

தேனியில் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து கலெக்டர் ஷஜீவனா ஆய்வு

தேனி மாவட்டத்தில் உள்ள தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட 427 பள்ளி வாகனங்கள் மற்றும் உத்தமபாளையம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட 283 பள்ளி வாகனங்கள் என தேனி மாவட்டத்தில் மொத்தம் 710 பள்ளி வாகனங்கள் உள்ளன. இதில் தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி வாகனங்கள் ஆய்வு முகாம் 25.5.2023 அன்று ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

முகாமிற்கு தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கினார். தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம், முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேனி வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வக்குமார் வரவேற்றார். இந்த ஆய்வு முகாமின் போது பள்ளி வாகனங்கள் ஒழுங்குபடுத்துதல் கட்டுப்பாடு சிறப்பு விதிகள் 2012-ன்படி பள்ளி வாகனங்கள் சாலையில் இயக்கும் தகுதியில் உள்ளதாஎன்பதை கீழ்க்கண்டவாறு ஆய்வு செய்யப்பட்டது. அவசர கால வழி உள்ளதா, சரியாக இயங்குகிறதா? முதலுதவி பெட்டி சரியாக பராமரிக்கப்படுகிறதா?

ஏறி இறங்கும் படிக்கட்டுகள் சரியாக உள்ளதா?தீயணைப்பான் கருவி சரியாக உள்ளதா? வாகனத்தின் தரை பலகை உறுதியாக உள்ளதா?வாகனத்திற்கு முன்னாள் உள்ளார்களா என்பதை சிறு குழந்தைகள் கண்காணிப்பதற்கு வாகனத்தின் முன்புறம் கேமரா பொருத்தப்பட்டுள்ளதா?வாகனத்தின் பின்புறம் கேமரா மற்றும் சென்சார் ஒலிப்பான் பொருத்தப்பட்டுள்ளதா? வாகனத்தின் பிரேக் பிடிக்கும் திறன் உள்ளதா? வேக கட்டுப்பாட்டு கருவி சரியாக வேலை செய்கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட குறைபாடுகளை சரிசெய்து 4 நாட்களுக்குள் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதுபோல இந்த முகாம் ஆய்வில் பங்கேற்காத வாகனங்களை நாளை அல்லது நாளை மறு நாள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வுக்கு உட்படுத்தி கொள்ளலாம்.இந்த ஆய்வின் போது பள்ளி டிரைவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் டிரைவர்களுக்கு கண் பரிசோதனை, சுகர், பிரஸ்சர் மற்றும் பொதுநலம் பரிசோதனை செய்யப்பட்டது.

இதற்கிடையே பள்ளி வாகனங்களை மிகவும் பாதுகாப்பாக வாகனத்தை ஒட்டிய டிரைவர்களுக்கு கேடயம் மற்றும் விருது  வழங்கப்பட்டது. இந்த முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் விவேகானந்தன், தேனி டி.எஸ்.பி., பார்த்திபன் உள்பட வட்டார போக்குவரத்து அலுவலக பணியாளர்கள், பள்ளி வாகன டிரைவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தேனி வட்டார போக்குவரத்து அலுவலக கண்காணிப்பாளர் மதிவாணன் நன்றி கூறினார்.

இதேபோன்று  உத்தமபாளையம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்குட்பட்ட வாகனங்கள் 27.5.2023 உத்தமபாளையத்தில் வருவாய் கோட்டாட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், மோட்டார் வாகன ஆய்வாளர் அவர்களின் தலைமையில் ஆய்வு செய்யப்பட உள்ளது.

S R சீனிவாசன், உதவி ஆசிரியர் 



Comments