Skip to main content

குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் கோவில் ஆடித்திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்

தேனி, ஜூலை.6-
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (6.7.2026) குச்சனூர் அருள்மிகு சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோயில் ஆடிப்பெருந்திருவிழா நடைபெற உள்ளதையொட்டி, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன். தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அவர்கள், குச்சனூர் அருள்மிகு சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோயில் ஆடிப்பெருந் திருவிழாவின்போது, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்துத் துறை வாரியாக எந்தெந்த வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கலந்த ஆலோசனை மேற்கொண்டு இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் திருவிழா காலத்தில் திருக்கோயிலில் சாமி தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு தரிசனத்திற்கு செல்லும் வழியினை தெளிவாக வழிகாட்டிப் பலகை (Arrow mark) மூலம் காண்பித்தில், கோயில் வளாகம் முழுவதும் சிசிடிவி கேமரா அமைத்து கண்காணித்தல், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பான முறையில் தரிசனம் செய்ய வழிவகை செய்திட வேண்டும்.
குச்சனூர் பேரூராட்சி நிர்வாகம் மூலம் பக்தர்கள் திருக்கோயிலுக்கு வந்து செல்லும் வழிகள் பேருந்து நிறுத்தங்கள் மற்றும் இதர வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் சின்டெக்ஸ் தொட்டிகள் வைத்து போதிய அளவு குடிநீர் வழங்க வேண்டும். மேலும் நடமாடும் சுகாதார வாகனங்கள் இயக்குவதுடன், தற்காலிக கழிப்பறை வசதிகள் அமைத்திட வேண்டும். அதேபோல தினசரி சேரக்கூடிய குப்பைகளை அவ்வப்போது அகற்றிட போதுமான அளவு பணியாளர்களை நியமித்திட வேண்டும். திருவிழாவிற்கு அதிகளவு பக்தர்கள் வந்து செல்வதை கருத்தில் கொண்டு திருக்கோயில் வளாகம் மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் போதுமான அளவு மின் விளக்கு அமைத்திட வேண்டும்.

காவல்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஒருங்கிணைந்து தேவையான இடங்களில் கூடுதல் காவல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதுடன், 10.8.2026 அன்று நடைபெறும் சாமி ஊர்வலம் மற்றும் கருப்பணசாமி கிடா வெட்டு நிகழ்ச்சியின்போது தேவையான அளவு போலீசாரை நியமித்து சிறந்த முறையில் பணியாற்றிட வேண்டும்.

மேலும், அரசு போக்குவரத்துக்கழகம் மூலம் பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையான அளவு கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கிட வேண்டும். திருவிழா காலங்களில் தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் மூலம் சீரான மின் வினியோகம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

பொது சுகாதாரத் துறையில் மூலம் தற்காலிக மருத்துவ முகாம் அமைத்து மருத்துவக் குழு செயல்பட்டு வருவதுடன், 108 ஆம்புலன்ஸ் சேவையினை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் தீயணைப்புத்துறை மற்றும் வட்டார போக்குவரத்துத்துறை கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் கோயில் வளாகம் மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள உணவகங்களில் உணவுப் பொருட்களின் தரத்தன்மை குறித்து அவ்வப்போது ஆய்வு செய்து, நெகிழிகள் பயன்படுத்துவதை தடை செய்திட வேண்டும் என அறிவுறுத்தியதுடன். இந்துசமய அறநிலையத்துறை அனைத்துத் துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு திருக்கோயிலுக்கு வருகைதரும் பக்தர்கள் சிறந்த முறையில் தரிசனம் செய்திடும் வகையில் சிறப்பாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் வைத்திநாதன் அறிவுறுத்தினார்.

இந்த கூட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மகேஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) இராமகிருஷ்ணன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் வில்லியம் ஜேசுதாஸ், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சையது முகைதீன் இப்ராஹிம், உதவி ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை) ஜெயதேவி, மாவட்ட சுற்றுலா அலுவலர் பாஸ்கரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
..................................
K.நாகராஜ், தலைமை நிருபர் 

Comments