Skip to main content

தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை சார்பில்; காமராஜர் 124-வது பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது


தேனி, ஜூலை.17-

தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சரும், எளிமையின் சிகரம் மற்றும் கிங்மேக்கர் "கல்விக் கண் திறந்த கர்மவீரர்" எனப் போற்றப்படும் பெருந்தலைவர் காமராஜர், ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களும் கல்வி கற்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் எண்ணற்ற பள்ளிகளை தொடங்கி, இலவச கல்வி மற்றும் மதிய உணவு திட்டம் போன்ற வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை செயல்படுத்தினார். அவரது கல்வி புரட்சியால் தமிழகம் கல்வியில் புதிய எழுச்சியை அடைந்தது. அவரது தன்னலமற்ற சேவை, எளிமை, நேர்மை மற்றும் மனிதநேயத்தை இன்றைய இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அவரது பிறந்த நாள் கல்வி திருவிழாவாக தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை சார்பில் இந்த ஆண்டு மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

இந்த பிறந்த நாள் விழா குறித்து உறவின்முறை பொதுச்செயலாளர் ஆனந்தவேல் கூறியதாவது, பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சமூக பொறுப்பு, உடல்நலம், மனிதநேயம் மற்றும் விளையாட்டு உணர்வை ஊக்குவிக்கும் வகையில் மினி மாரத்தான், மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டிகள், மாபெரும் ரத்ததான முகாம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.

இந்நிகழ்வுகள் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் தர்மராஜன், உபதலைவர் ஜீவகன், பொதுச்செயலாளர் ஆனந்தவேல் மற்றும் பொருளாளர் ராமச்சந்திரன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற விழாவில் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள், செயலாளர்கள், இணைச்செயலாளர்கள், கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.

இந்த விழாவின் முதல் நிகழ்வாக  கடந்த 13-ந் தேதி தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, முத்துதேவன்பட்டி வளாகத்தில் மாவட்ட அளவிலான மகளிர் கூடைப்பந்து போட்டி சிறப்பாக நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இந்த போட்டிகளில் நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாடார் சரசுவதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நாடார் சரசுவதி பப்ளிக் பள்ளி, வடபுதுப்பட்டி, உறவின்முறை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வடபுதுப்பட்டி, நாடார் சரசுவதி பொறியியல் மற்றும் தொழிற்நுட்ப கல்லூரி ஆகியவை பங்கேற்றது. இதில் நாடார் சரசுவதி பொறியியல் மற்றும் தொழிற்நுட்ப கல்லூரி வெற்றி கோப்பையை பெற்றது.

இதனைத்தொடர்ந்து கடந்த 14-ந் தேதி நாடார் சரசுவதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் மாணவர்களின் புதுமைத்திறன், தொழில்நுட்ப அறிவு மற்றும் தொழில்முனைவு திறன்களை மேம்படுத்தும் நோக்கில் NSCET NextGen Innovation Hub மின்சார வாகன தொழில்நுட்ப சிறப்பு மையம், THISAI AI Powered Students Intelligent Platform திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்கள், உறவின்முறை நிர்வாகிகள், பேராசிரியர்கள் ஆகியோர் மாணவ, மாணவியர்களின் கண்டுபிடிப்புகளை பார்வையிட்டு பாராட்டினர்.

அதுபோல 14-ந் தேதி நடைபெற்ற ரத்த தானம் முகாமை டாக்டர்.வேல்முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் 398 பேர் ரத்த தானம் வழங்கினர்.

இதனை அடுத்து கடந்த 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தேனி நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட அளவிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான ஆண்கள் கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று தங்களது விளையாட்டு திறமையை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளும், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்த போட்டிகளில் வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, தேனி மேரிமாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேனி பாரதி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேனி TMHNU வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முத்துதேவன்பட்டி வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஜி.கல்லுப்பட்டி செயின்ட் பீட்டர் மேல்நிலைப்பள்ளி, போடி இசட்.கே.எம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வடபுதுபட்டி என்.எஸ் பப்ளிக் பள்ளி, ஆண்டிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, முத்துதைவன்பட்டி வேலம்மாள் பப்ளிக் பள்ளி, கம்பம் சக்தி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெரியகுளம் வி.எம். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ராயப்பன்பட்டி எஸ்.யு.எம். மேல்நிலைப்பள்ளி, தேனி என்.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவை பங்கேற்றது. இதில் தேனி என்.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி கோப்பையினை பெற்றனர்.

அதுபோல கடந்த 14 மற்றும் 15 ஆகிய 2 நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற மாபெரும் இரத்ததான முகாமில் அனைத்து கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், 18 வயதிற்கு மேற்பட்ட மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என மொத்தம் 657 பேர் ரத்த தானம் கொடுத்தனர்.

இந்த ரத்த தானம் முகாமில் தேனி மாவட்ட கலெக்டர் வைத்திநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரத்த தானம் முகாமை நிகழ்வினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு சமூகசேவை, மனிதநேயம் மற்றும் பொதுநல உணர்வை வளர்க்கும் நோக்கில் இரத்ததான முகாம் நடத்தப்படுகிறது. உயிரைக் காக்கும் இரத்ததானத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துதல், மாணவர்களிடையே சமூகப் பொறுப்புணர்வை வளர்த்தல், மனிதநேயம், சேவை மனப்பான்மை மற்றும் ஒற்றுமையை ஊக்குவித்தல், அவசர தேவைகளில் இரத்தத்தின் அவசியத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பெருந்தலைவர் காமராஜரின் எளிமை, சேவை, மக்கள் நலம் போன்ற உயரிய பண்புகளை மாணவ, மாணவியர்கள் பின்பற்ற வேண்டும் என்பதனை ஊக்குவிக்கும் விதமாக இரத்ததான முகாம் நடைபெறுகிறது. "காமராஜர் வழியில் சேவை செய்வோம்! இரத்ததானம் செய்து உயிரைக் காப்போம்! மனிதநேயத்துடன் முன்னேறுவோம்!" என்று பேசினார்.

இதேபோன்று கடந்த 15-ந் தேதி மாணவ மற்றும் மாணவியர்களிடையே உடல் நலம், ஒற்றுமை மற்றும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மினி மாரத்தான் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் பங்கேற்று, பெருந்தலைவர் காமராஜரின் சேவை மனப்பான்மை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை எடுத்துரைக்கும் வகையில் ஓடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்வில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மினி மாரத்தானை தொடங்கி வைத்தார். இந்த மினி மாரத்தான் போட்டியில் தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் அன்டர்-19 ஆண்கள் பிரிவில்- 679, அன்டர்-17 ஆண்கள் பிரிவில் - 1033, பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர்கள் பிரிவில்-845 என 2357 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

இதில் அன்டர்-17 ஆண்கள் பிரிவில் முதல் 3 இடங்களை மாணவர்கள் ரித்திக் ஈஸ்வரன், விஸ்வா, நிதீஷ்குமார் ஆகியோர் பிடித்தனர். இதேபோன்று அன்டர்-19 ஆண்கள் பிரிவில் முதல் 3 இடங்களை மாணவர்கள் ஹரிஹரன், கபிலன், அதீஷ் ஆகியோர் பிடித்தனர். அதுபோல மாணவியர்கள் பிரிவில் முதல் 3 இடங்களை மாணவிகள் இளமதி ஷிவன்யா, சுடர்மதி, கோபிகாஸ்ரீ ஆகியோர் பிடித்தனர்.

இதேபோன்று கல்லூரி மாணவியர்கள் பிரிவில் மாணவிகள் யோக ஸ்ரீ, ஷானியா, கோபிகா ஆகியோர் பிடித்தனர். அதுபோல கல்லூரி மாணவர்கள் பிரிவில் முதல் 3 இடங்களை முகமது நவ்பில், குருபிரசாத், திருநாவுக்கரசு ஆகியோர் பிடித்தனர்.

இதற்கிடையே பெருந்தலைவர் காமராஜரின் கல்விச் சேவை, எளிமை, நேர்மை, மனிதநேயம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு பற்றிய பதாதைகளுடன் மாணவ, மாணவியர்களின் ஊர்வலம், கல்வி புரட்சி, விவசாயம், நிர்பாசனம், தொழில்வளர்ச்சி, மக்கள் நலன், நேர்மையான நிர்வாகம் பற்றிய அலங்கார ஊர்தி அணிவகுப்பு நிகழ்வு நடைபெற்றது. 

இதனைத்தொடர்ந்து நாடார் சரசுவதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் திருவுருவச்சிலைக்கு உறவின்முறை நிர்வாகிகள் மாலை அணிவித்து, உறுதிமொழி எடுத்துக்கொணடனர்.

இந்த சிறப்பு நிகழ்வாக நெக்ஸ்ட் கிளஸ்டர் நிகழ்ச்சிக்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை பொதுச்செயலாளர் ஆனந்தவேல் வரவேற்றார். உறவின்முறை பொருளாளர் ராமச்சந்திரன் நெக்ஸ்ட் கிளஸ்டர் நிகழ்ச்சியின் குறிக்கோள்கள் பற்றி எடுத்துரைத்தார். பாலசங்கா குழுமத்தை சேர்ந்த செந்தில் நாராயணன் அறிமுக உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக மதுரை எஸ்.வி.எஸ் அக்மார்க் கடலை மாவு நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர் சூரஜ் சுந்தர சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நெக்ஸ்ட் கிளஸ்டர் நிகழ்வினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார. 

முடிவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் விஜய் நன்றி கூறினார்.

இதனைத்தொடர்ந்து கடந்த 15-ந் தேதி வானவேடிக்கை நிகழ்வுடன் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் மற்றும் கல்வித்திருவிழா-2026 கொண்டாட்டம் நிறைவடைந்தது.

....................................

K.நாகராஜ், தலைமை நிருபர் 

Comments