தேனி, ஜூன்.29-
தமிழ்நாட்டில் த.வெ.க தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர் சரத்குமார் பொது இடங்களில் போதைப்பொருள் பயன்படுத்தியது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி உள்ளது. இதனை கண்டித்து தேனி திமுக வடக்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் த.வெ.க அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் தேனி பழனிசெட்டிபட்டி பகுதியில் 29.6.2026 அன்று நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்காக பெரியகுளம் முன்னாள் எம்.எல்.ஏ., சரவணகுமார், மாவட்ட துணை செயலாளர் திருக்கண்ணன், ஒன்றிய செயலாளர் அய்யப்பன், போடி நகர செயலாளர் புருஷோத்தமன், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி, பழனிசெட்டிபட்டி பேரூர் திமுக செயலாளர் செல்வராஜ், பூதிப்புரம் பேரூராட்சி தலைவர் கவியரசு, வீரபாண்டி பேரூர் திமுக செயலாளர் செல்வராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள், திமுக மாணவரணியினர் த.வெ.க அமைச்சர் சரத்குமாரை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி கொண்டே ஊர்வலமாக வந்தனர்.
அப்போது ஆர்ப்பாட்டத்திற்கு ஊர்வலமாக வந்த திமுக-வினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனை அடுத்து திமுக-வினர் சாலையில் அமர்ந்து த.வெ.க அமைச்சரை கண்டித்தும், அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட திமுக-வினரை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றி சென்று போடி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
...........................
நாகராஜ், தலைமை நிருபர்




Comments