தேனி பழனிசெட்டிபட்டி பேரூராட்சி நிர்வாகம் தொடர்பான மக்கள் குறைதீர்வு சிறப்பு முகாம்: பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி தொடங்கி வைத்தார்
தேனி, ஜூன்.29-
தேனி பழனிசெட்டிபட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் மக்கள் குறைதீர்வு சிறப்பு முகாம் 29.6.2026 மற்றும் 30.6.2026 ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கான முகாமை பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் யோகஸ்ரீ, துணைத்தலைவர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
முகாமின் போது பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்படும் சேவைகளான புதிய சொத்துவரி நிர்ணயம், வரி விதிக்கப்படாத வரிவிதிப்புகளின் கீழ் சொத்து வரி நிர்ணயம் செய்தல், புதிய குடிநீர் இணைப்பு, சொத்து வரி மற்றும் குடிநீர் வரி பெயர் மாற்றம், தொழில்வரி, தொழில் உரிமம், கட்டிட உரிமம், மனைப்பிரிவு அங்கீகாரம், பிறப்பு இறப்பு சான்று, சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை போன்ற சேவைகள் தொடர்பான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.இந்த சிறப்பு குறைதீர்வு முகாமின் மூலம் பெறப்படும் மனுக்களை உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டுமென பேரூராட்சி அதிகாரிகளுக்கு பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி அறிவுறுத்தி உள்ளார்.
இதேபோன்று நாளையும் (ஜூன் 30) மக்கள் குறைதீர்வு சிறப்பு முகாம் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Comments