கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் உண்ணாவிரத காத்திருப்பு போராட்டம்: தேனி பங்களாமேடு பகுதியில் நாளை (ஜூன் 22) நடக்கிறது
தேனி, ஜூன்.21-
தமிழ்நாடு முதல்வர் அவர்கள் விசாயிகளுக்கு அளித்த உத்தரவாதமான கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்கிற கோரிக்கையை நிறைவேற்ற கோரி ஜீன் 22 முதல் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் காலவரையற்ற உண்ணாவிரத மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டம் 22.6.226 திங்கட்கிழமை முதல் நடைபெறுகிறது.
தேனி மாவட்டத்தில் இந்த போராட்டம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிராஜ் தலைமையில் தேனி பங்களாமேடு பகுதியில் காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது.
இந்த போராட்டம் குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தெரிவிக்கையில், கடந்த 15 ஆண்டுகளாக விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்து உணவுப் பொருட்களும் விளையும் எவ்வித விலையேற்றமும் இல்லாமல் இருந்து வரும் சூழ்நிலையில், உரங்கள், மருந்துகள், ஆள்கூலி, இயந்திரங்களின் வாடகை, கடனுக்கான வட்டி என அனைத்துமே உயர்ந்து விட்ட சூழ்நிலையில், மத்திய மாநில அரசுகள் வாக்குறுதி அளித்தபடி விவசாயிகள் அனைத்து உணவுப் பொருட்களுக்கும் உற்பத்தி செலவுடன் 50% சேர்த்து விலை நிர்ணயம் செய்து, கொள்முதல் செய்யப்படும் என்கிற வாக்குறுதி நிறைவேற்றப்படாமலே உள்ளது.
விவசாயிகளின் அனைத்து சொத்துக்களும் கடனிலேயே உள்ளது. வீட்டில் உள்ள பெண்களின் நகைகள் அனைத்தும் அடமானத்தில் உள்ளது. 150 வகையான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்ய சொல்லும் அரசுகள், உற்பத்தி செய்து சந்தைக்கு கொண்டு வந்ததும் விலை கொடுக்காமல், கொள்முதல் செய்யாமல் விவசாயிகள் ஏமாற்றப்படுவதால் விவசாயிகள் கடனிலேயே வாழ்ந்து வருகிறார்கள்.
எனவே விவசாயிகளுக்கு ஏற்படக்கூடிய கடனுக்கு அரசுகள் பொறுப்பேற்ற நீண்ட காலமாக விவசாயிகளின் பல்வேறு வகையான கடன்களை தள்ளுபடி செய்து வருகிறார்கள். கடந்த வாரம் மகாராஷ்டிரா அரசு 36,000 கோடி அளவுக்கு 56 லட்சம் விவசாமிகள் கடன்களை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், கடந்து 2023 ஆம் ஆண்டு முதல் 30 நாட்கள் தொடர் காத்திருப்பு போராட்டமும், சென்னையில் தலைமைச் செயலகம் முற்றுகை, கடந்த 2025 டிசம்பர் 29 அன்று ஈரோடு மாவட்டம், விஜய மங்கலத்தில் 50,000 விவசாயிகளை திரட்டி கடன் விடுதலை மாநாடு நடத்தியதன் விளைவாக தமிழ்நாட்டில் கூட்டுறவு பயிர் கடன்கள் 5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீதமும் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக வெற்றிக்கழகம் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், தமிழ்நாட்டு விவசாயிகளும் பொதுமக்களும் மாற்றத்தை விரும்பி தமிழக வெற்றி கழகத்கத்திற்கு வாக்களித்ததால் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் C.ஜோசப் விஜய் அவர்கள் தமிழ்நாட்டின் முதல்வராக பதவி ஏற்ற உள்ளார்கள்.
மாற்றத்தை விரும்பி மக்கள் வாக்களித்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைந்தவுடன் முதல் கையெழுத்தாக கூட்டுறவு பயிர்கடன் தள்ளுபடி உத்தரவு இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது. அதனை தொடர்ந்து 90% தமிழ்நாட்டு விவசாயிகள் பயன்பெற முடியாத வகையில் தமிழ்நாடு அரசு செய்த கூட்டுறவு பயிர்கடன் தள்ளுபடி திட்டம் விவசாயிகளின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல் இருந்தது.
விவசாயிகளுக்கு வாக்குறுதி அளித்தபடி கூட்டுறவு பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய கோரி கடந்த ஜீன் ஒன்றாம் தேதி தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் பின்பு மறு பரிசீலனை செய்யப்படும் என கருத்துக்களை தெரிவித்த மாண்பு அமைச்சர் பெருமக்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் விவசாயிகள் கால அவகாசம் முடிந்து வருவதால் அபராத வட்டி கட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகி வரும் சூழ்நிலையில் வேறு வழியின்றி வருகிற ஜூன் 22 முதல் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கோரிக்கை நிறைவேறும் வரை காலவரையற்ற உண்ணாவிரத போராட்டமும் தொடர் காத்திருப்பு போராட்டமும் நடைபெற உள்ளது. அது சமயம் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும், அனைத்து விவசாய சங்க தலைவர்களும், போராட்டத்தில் சாதி மத கட்சி அடையாளங்களை துறந்து, பச்சை துண்டு அணிந்து குடும்பத்துடன் பங்கேற்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
உழவர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க போராட்டத்தில் இணைவீர். என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், கூட்டுறவு பயிர்கடன் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், அனைத்து விவசாய சங்கங்கள்,
கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடி கோரும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
...............................
நாகராஜ், தலைமை நிருபர்




Comments