தேனியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வைத்திநாதன் வழங்கினார்.
தேனி, ஜூன்.19-
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன், தலைமையில் இன்று (19.6.2026) நடைபெற்றது.
தேனி மாவட்டத்தில் ஜுன் மாதம் வரை ஆண்டு மழையளவான 30420 மி.மீ-க்கு தற்பொழுது வரை 256.39 மிமீ மழை பெறப்பட்டுள்ளது. இது ஜூன் மாதம் வரை ஆண்டு இயல்பான மழையளவில் 47.81 மி.மீ குறைவாகும். ஜுன் 2026 மாதத்திற்கான இயல்பு மழையளவான 2760 மி.மீக்கு தற்பொழுது வரை 54.95 மி.மீ மழை பெறப்பட்டுள்ளது. இது ஜூன் மாத இயல்பான மழை அளவை காட்டிலும் 27.35 மி.மீ அதிகமாகும்.
தேனி மாவட்டத்தில் நடப்பாண்டு நெல் 587 ஹெக்டர் பரப்பிலும், சிறுதான்யம் 121 ஹெக்டர் பரப்பிலும், பயறு வகைகள் 373 ஹெக்டர் பரப்பிலும், தோட்டக்கலை பயிர்களான பழப்பயிர்கள் 7366 ஹெக்டர் பரப்பிலும், காய்கறி பயிர்கள் 146 ஹெக்டர் பரப்பிலும், மலைத்தோட்ட பயிர்கள் 11044 ஹெக்டர் பரப்பிலும், நறுமணப்பயிர்கள் 1738 ஹெக்டர் பரப்பிலும், மலர்ப்பயிர்கள் 525 ஹெக்டர் பரப்பிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் விதை 100 மெ.டன்னும், சிறுதானியங்கள் 6 மெடன்னும், பயறு வகை விதைகள் 13 மெ.டன்னும், எண்ணெய்வித்துப் பயிர் விதைகள் 0.5 மெடன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தில் நெல் இயந்திர நடவு மற்றும் நெல் நேரடி விதைப்பிற்கு பின்னேற்பு மானியமாக ஏக்கர் ஒன்றிற்கு ரூ.4000/- வழங்கப்பட உள்ளது. தேனி மாவட்டத்திற்கு இலக்காக 1000 ஏக்கர் வரப்பெற்றுள்ளது. மேலும், நெல் நுண்ணூட்ட உரம் எக்கர் ஒன்றிற்கு 5 கிலோ வீதமும், திரவ உயிர் உரங்கள் ஏக்கர் ஒன்றிற்கு அரை லிட்டர் வீதமும் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும். ஒரு விவசாயி அதிகபட்சமாக 5 ஏக்கர் வரை மானியம் பெற்று பயன்பெறலாம். 53 மெ.டன் நெல் விதை 50 சதவீத மானியத்தில் விநியோகம் செய்ய தயார் நிலையில் உள்ளது.
முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் தக்கைபூடு விதைகள் 50 சதவீத மானியத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
துவரை பயிரானது நடவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் சாகுபடி செய்யும் பொழுது மகசூல் அதிகரிக்கும் என ஆய்வுகள் முடிவுகள் தெரிவிக்கப்பட்டதைத்தொடர்ந்து, நடப்பாண்டு தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் நடவு தொழில்நுட்பம் மூலமாக துவரை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டருக்கு ரூபாய் 10,000 வரை மானியம் வழங்கப்பட உள்ளது. தேனி மாவட்டத்திற்கு இலக்காக 620 ஏக்கர் வரப்பெற்றுள்ளது.
தேனி மாவட்டத்தில் பாரத பிரதமரின் கௌரவ நிதி பெரும் திட்டத்தின் கீழ் மொத்தம் உள்ள 26050 பயனாளிகளில் இதுவரை 23,550 பயனாளிகள் மட்டுமே விவசாய அடையாள எண் பெற்றுள்ளார்கள். மீதமுள்ள பிற விவசாயிகளும் கௌரவ நிதித்திட்டத்தின் கீழ் தொடர்ந்து பயனடைய உடனடியாக விவசாய அடையாள எண்ணை பதிவுசெய்து கொள்ள வேண்டும்.
மேலும், திருப்பூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் விவசாய அடையாள எண்ணை அடிப்படையாகக் கொண்டு உர கடைகள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் உரம் வழங்கும் திட்டமானது துவங்கப்பட உள்ளது. எனவே நிலம் வைத்துள்ள அனைத்து விவசாயிகளும் அடையாள எண்ணினை பெற ஆதார். ஆதார் உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் நில ஆவணங்களான சிட்டா அல்லது பட்டா ஆகியவற்றுடன் அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி பதிவு செய்துகொள்ளலாம்.
மேலும், இக்கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து வரப்பெற்ற மனுக்களுக்கு உரிய பதிலினை விவசாயிகளுக்கு வழங்கிட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.
முன்னதாக தேசிய தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறையின் சார்பில், தோட்டக்கலை இயக்கத் திட்டம் 2026-27-இன் கீழ் மா பரப்பு விரிவாக்கம் செய்வதற்கான இனத்தின்கீழ் ரூ.24,000 மானியத்திலும், எலுமிச்சை பரப்பு விரிவாக்கம் செய்வதற்கான இனத்தின்கீழ் ரூ.15,000/- மானியத்திலும் மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர் பயனாளிகளுக்கு வழங்கினார்.
அதுபோல கூட்டத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில் கூட்டுறவு சங்கங்களில் விற்பனை செய்யப்படும் உயிரி உரங்கள், இயற்கை உரங்கள் ஆகியவை விவசாயிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார், உதவி வன பாதுகாவலர் சாய்சரண் ரெட்டி, வேளாண்மை இணை இயக்குநர் சாந்தாமணி, இணைப்பதிவாளர் (கூட்டுறவு) நர்மதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) (பொ) ராஜசேகர் உள்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப்பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
..................................
நாகராஜ், தலைமை நிருபர்





Comments