Skip to main content

"கீர்த்தி சக்ரா" விருது பெற்ற ராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ.மீனாட்சி சுந்தரம் அவர்களின் இல்லத்திற்கு தேனி மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் நேரில் சென்று பாராட்டினார்

 

தேனி, ஜூன்.17-

தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த இராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ.மீனாட்சி சுந்தரம் அவர்கள் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் வெளிப்படுத்திய அசாத்திய வீர தீரச் செயலைப் பாராட்டி இந்திய அரசின் கீர்த்தி சக்ரா" விருது பெற்றதைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் இன்று (17.6.2026), இராணுவ வீரரின் இல்லத்திற்கு நேரில் சென்று, பொன்னாடை போர்த்தி பூங்கொத்து வழங்கி பாராட்டினார்.

இந்திய இராணுவத்தின் பீரங்கிப் படைப்பிரிவில் பணியாற்றி வரும் தேனி மாவட்டத்தை சேர்ந்த லான்ஸ் நாயக் அ.மீனாட்சி சுந்தரம் அவர்கள் டிசம்பர் 19, 2024 அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள குல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது, பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் முகம் மற்றும் தோள்பட்டையில் பலத்த காயம் அடைந்த நிலையிலும், தனது கடமையிலிருந்து தவறாமல் தொடர்ந்து போராடி, பயங்கரவாதிகளை வீழ்த்தினார். அவரது அசாத்திய வீர தீரச் செயலைப் பாராட்டி இந்தியாவின் இரண்டாவது உயரிய அமைதிக்கால வீரவிருதான கீர்த்தி சக்ரா விருதினை இந்திய குடியரசுத் தலைவர் அவர்கள் கடந்த 8.6.2026 அன்று புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் வழங்கி சிறப்பித்தார்.

அதனைத்தொடர்ந்து, தேசத்தின் பாதுகாப்பிற்காக தனது இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட இந்திய இராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ.மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு அரசின் சார்பில் 48 லட்சம் ரூபாய்க்கான காசோலையை 15.6.2026 அன்று வழங்கி தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து தேனி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் கீர்த்தி சக்ரா விருது பெற்ற காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த இராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ.மீனாட்சி சுந்தரம் அவர்களின் இல்லத்திற்கு தேனி மாவட்ட கலெக்டர் வைத்திநாதன் நேரில் சென்று பொன்னாடை போர்த்தி பூங்கொத்து வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். இந்நிகழ்வில் உத்தமபாளையம் தாசில்தார் பாலசண்முகம் உள்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
.............................
நாகராஜ், தலைமை நிருபர் 

Comments