Skip to main content

தேனி அல்லிநகரம் வீரப்ப அய்யனார் மலைக்கோவில் வளாக பகுதியில் கழிப்பறை கட்டும் இடத்தை மாற்றி அமைக்க வேண்டும்: இந்து எழுச்சி முன்னணியினர் அறநிலையத்துறை உதவி ஆணையரிடம் கோரிக்கை மனு

தேனி, ஜூன்.1-

தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைவர் இராமராஜ் ஆலோசனையின் படி மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி தலைமையில் மாவட்ட இணை அமைப்பாளர் செல்வபாண்டியன், இந்து எழுச்சி முன்னணி தொழிலாளர் நலச்சங்க மாவட்ட அமைப்பாளர் மணிகண்டன், தேனி நகர அமைப்பாளர் கனகுபாண்டி, தேனி நகர பொருளாளர் நாகராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மொக்கை, ராஜீகண்ணு மற்றும் பூசாரி பேரவை நகர் அமைப்பாளர்  கோவிந்தராஜ் சாமி ஆகியோர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் ஜெயதேவி அவர்களிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

அந்த மனுவில், தேனி அல்லிநகரம் அருள்மிகு ஸ்ரீ வீரப்ப அய்யனார் மலைக்கோவில் தேனி மாவட்டத்தின் மிகப் பிரசித்தி பெற்ற ஆன்மிக திருத்தலங்களில் ஒன்றாகும் என்றும், ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா தென் தமிழ்நாட்டின் முக்கிய ஆன்மிக விழாக்களில் ஒன்றாக விளங்குகிறது என்றும் குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில், ஸ்ரீ வீரப்ப அய்யனார் மலைக்கோவிலின் ஈசானி மூலையில் (வடகிழக்கு திசை) இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கழிப்பறை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். வாஸ்து சாஸ்திரம் மற்றும் பாரம்பரிய ஆன்மிக நம்பிக்கைகளின்படி ஈசானி மூலை மிகவும் புனிதமான பகுதியாக கருதப்படுவதால், அங்கு கழிப்பறை அமைப்பது பொருத்தமற்றது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதன் காரணமாக பக்தர்களின் ஆன்மீக உணர்வுகள் பாதிக்கப்படுவதோடு, கோயிலின் பாரம்பரிய புனிதத்தன்மையும் குன்றும் என்ற அச்சம் நிலவுகிறது. எனவே நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் குறித்து நேரடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும். வாஸ்து நிபுணர்கள், ஆகம அறிஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு உரிய ஆய்வு நடத்த வேண்டும்.

ஆய்வின் அடிப்படையில் ஸ்ரீ வீரப்ப அய்யனார் மலைக்கோவிலின் ஈசானி மூலையில் கழிப்பறை அமைப்பது பொருத்தமற்றது எனத் தெரியவரும் பட்சத்தில், அந்த பணிகளை உடனடியாக நிறுத்தி மாற்று இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பக்தர்களின் ஆன்மீக உணர்வுகளுக்கும், கோயிலின் பாரம்பரிய மரபுகளுக்கும் உரிய மதிப்பளிக்கும் வகையில் தீர்வு காண வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட உதவி ஆணையாளர் ஜெயதேவி அவர்கள், கோரிக்கையை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
..................................
நாகராஜ், தலைமை நிருபர் 
செல் : 9842145271

Comments