Skip to main content

தேனி மாவட்டத்தில், தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு முகாம்: கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் அதிகாரிகள் பார்வையிட்டனர்

தேனி, மே.9-

தேனி மாவட்டம், ஆயுதப்படை மைதானத்தில் தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட தனியார் பள்ளிகளின் வாகனங்களை ஆய்வு செய்யும் சிறப்பு முகாம் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹாப்ரியா முன்னிலையில் 9.5.2026 அன்று அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தேனி மாவட்ட நிர்வாகம், காவல்துறை, பள்ளிக்கல்வித்துறை, தீயணைப்புத்துறை, வட்டார போக்குவரத்து அலுவலகம் இணைந்து தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 47 பள்ளிகளில் (தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி தாலுகா)  உள்ள 380 வாகனங்களில் 297 பள்ளி வாகனங்களை கூட்டாய்வு செய்யும் பணிகள் நடைபெற்றது.
இந்த ஆய்வின்போது, பள்ளி வாகனத்தில் அவசர கால வழி (EmergencyExit Doori முதலுதவி பெட்டி, ஏறி இறங்கும் படிக்கட்டுகள், தீயணைப்பான் கருவி, வாகனத்தின் தரை பலகை (Plot form), கண்காணிப்பு கேமரா உள்புறம் மற்றும் வெளிப்புறம், அவசர கால தொலைப்பேசி எண்கள் ஆகியன முறையாக உள்ளதா என்றும் மேலும் வேக கட்டுப்பாட்டுக்கருவி வாகனத்தின் பிரேக்கின் திறன் போன்றவை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பள்ளி வாகன ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களிடம் தெரிவிக்கையில், ஆண்டுக்கு ஒருமுறை பள்ளி மாணவர்களை அழைத்து செல்லும் வாகனங்களை கூட்டாய்வு மூலம் ஆய்வு செய்திட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதன் அடிப்படையில், இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளி வாகன ஓட்டுநர்கள் சீருடை அணிந்திருக்க வேண்டும். பள்ளி வாகனத்தில் ஒரு உதவியாளர் இருக்க வேண்டும். வாகனத்தின் பின்புறம் பள்ளி நிர்வாகத்தின் தொலைப்பேசி எண், வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் தொலைப்பேசி எண், காவல் நிலைய தொலைப்பேசி எண். குழந்தைகள் பாதுகாப்பு எண் உள்ளிட்டவை நன்றாக தெரியும் வகையில் எழுதப்பட வேண்டும். வாகனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட குறைபாடுகளை சரிசெய்து மீண்டும ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

ஒரு வாகனத்தின் திறன் எவ்வாறு முழுமையாக உள்ளதோ அதேபோன்று வாகன ஓட்டுநர்களும் முழுமையான உடல் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். அதன்படி, பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே வாகன ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கண் பரிசோதனை மேற்கொண்டு மருத்துவரின் அறிவுரையை பின்பற்றி முறையாக மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். முறையாக மருத்துவ பரிசோதனைகளை தொடர்ந்து மேற்கொண்டு, உடலை பேணி பாதுகாத்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு அரசு விதித்துள்ள வழிமுறைகளையும், சாலை பாதுகாப்பு விதிகளையும். முறையாக பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும். பள்ளி மாணவர்களை ஏற்றி செல்வதால் வாகனங்கள் இயக்குவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இன்று ஆய்வுக்கு வராத வாகனங்களை பள்ளி திறப்பதற்கு முன்பாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வுக்கு உட்படுத்தி. கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

இன்று ஆய்வு செய்யப்பட்ட 297 வாகனங்களில் சிறு சிறு குறைபாடுகள் கொண்ட 18 வாகனங்கள் கண்டறியப்பட்டு குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த அறிவுறுத்தப்பட்டது. 279 வாகனங்கள் தகுதியானவையாக கருதப்பட்டு தொடர்ந்து பள்ளி குழந்தைகளை ஏற்றி இறக்க அனுமதிக்கப்பட்டது. மீதமுள்ள வாகனங்களும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பப்பட்ட பின்னரே பள்ளி குழந்தைகளை ஏற்றி இறக்க அனுமதிக்கப்படும்.

இதேபோன்று உத்தமபாளையம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட (உத்தமபாளையம் மற்றும் போடிநாயக்கனூர் வட்டம்) 287 பள்ளி வாகனங்கள் வருகின்ற 14.5.2026 அன்று கூட்டாய்வு செய்யும் பணிகள் நடைபெற உள்ளது.

இந்த ஆய்வில், பெரியகுளம் சப் கலெக்டர் ரஜத்பீடன், வட்டார போக்குவரத்து அலுவலர் மாணிக்கம், முதன்மை கல்வி அலுவலர் நாகேந்திரன், மோட்டார் வாகன ஆய்வாளர் சுந்தர் ராமன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
...........................
நாகராஜ், தலைமை நிருபர் 

Comments