தேனி வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் : கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார்
தேனி, மே.16-
தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முக்கிய திருவிழாவாக ஆண்டுதோறும் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை பெருந்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழா கடந்த 12.5.2026 அன்று வெகு விமர்சையாக தொடங்கப்பட்டு 19.5.2026 வரை 8 நாட்கள் நடைபெற உள்ளது.
இத்திருவிழாவில் தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதுபோல தீச்சட்டி, ஆயிரம் கண் பானை, காவடி எடுத்தல் கிடா வெட்டுதல் போன்ற நேர்த்திக்கடனை இரவு பகலாக செலுத்தி வருகின்றனர்.
இதேபோன்று திருவிழாவிற்கு வந்து செல்லும் பக்தர்கள் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பொழுதுபோக்கிற்காக பல்வேறு வகையான எந்திர ராட்டினங்கள் மற்றும் கடல் கன்னி கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் கண்டு திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.
இந்த திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் அம்மனை தரிசித்து விட்டு, திருவிழா பகுதிகளை சுற்றி பார்த்து விட்டு செல்லும் வரை ஆண், பெண் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். பக்தர்கள் கோவிலுக்கு சென்று வர இடையூறு ஏற்படாத வண்ணம் உள்ளே சென்று, வெளியே வருவதற்கு தனித்தனி வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் பக்தர்களின் பார்வைக்கு நன்கு தெரியும் வண்ணம் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு, ஒலி பெருக்கியின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அறிவிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் 15.5.2026 அன்று நடைபெற்றது. தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பாரம்பரிய உடை அணிந்து தேர் வடத்தை பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன். பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மரு.சினேஹாப்ரியா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார், பேரூராட்சி தலைவர்கள் கீதாசசி (வீரபாண்டி), மிதுன்சக்கரவர்த்தி (பழனிசெட்டிபட்டி), கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், உதவி ஆணையர் (இந்துசமய அறநிலையத்துறை) ஜெயதேவி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஏ.எடிசன், தேனி தாசில்தார் சதீஸ்குமார், வீரபாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் இளங்கோவன், கோவில் செயல் அலுவலர் சுபிதா, தொழிலதிபர்கள் சக்தி, சுந்தரவடிவேல், வயல்பட்டி மணிகண்டன், பேரூராட்சி கவுன்சிலர் செல்வராஜ் உள்பட முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் பொதுமக்கள் பார்வைக்காக அமைக்கப்பட்டிருந்த புகைப்பட விளக்க கண்காட்சி பகுதியை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பார்வையிட்டார்.
................................
நாகராஜ், தலைமை நிருபர்







Comments