தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் போது ஓபிசி/டிஎன்டி வகுப்பையும் சேர்க்க வேண்டும்: தேனி கலெக்டர் அலுவலகத்தில் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் கோரிக்கை மனு
தேனி, மே.11-
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் A.கௌதமன் தலைமையில் மாநில செயலாளர்கள் T. ஜெயக்குமார், K. பிரதாப் மாநில மாணவர் அணி செயலாளர் சீ.கவியரசன், மாநில ஐடி விங் தலைவர் P. நதீஷ்குமார், தேனி மாவட்ட மகளிர் அணி தலைவி விஜயலட்சுமி, கம்பம் நகர செயலாளர் அஜித்குமார் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது,
ஜாதிவாரி சென்செஸ் கணக்கெடுப்பு என்பது சமத்துவ இந்தியாவை உருவாக்க தேவையான அடிப்படை புள்ளிவிபரம். மக்களின் எண்ணிக்கை, அவர்களின் கல்வி சமூக நிலை, அரசில் பல வகுப்புக்களின் பிரதிநிதித்துவம் குறித்த புள்ளிவிபரங்கள் இல்லாமல் அரசமைப்பு சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றவே முடியாது.
அன்னிய அரசு கூட இப்புள்ளி விபரங்களின் அவசியத்தை உணர்ந்து கடந்த 1872 முதல் 1931 வரை தொடர்ந்து எடுத்து பயன்படுத்தி வந்தது. ஆனால், சுதந்திர இந்தியாவில் மத்திய அரசு இப்புள்ளி விபரங்களை இதுவரை எடுக்கமல் இருப்பது ஓபிசி/டிஎன்டி மக்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியாகும். அரசு ஜாதிவாரி சென்செஸ் கண்ககெடுப்பை நடத்தாமல் இருப்பதற்கு எந்த விதமான நியாயமான காரணங்களும் இல்லை. அட்டவணை சமூகங்களுக்கு இருக்கும் அதே உரிமை ஓபிசி/டிஎன்டி சமூகங்களுக்கும் உண்டு. ஒரு பிரிவிற்கு எடுத்து மற்றொரு பிரிவிற்கு மறுப்பது ஏற்புடையதல்ல.
மத்திய அரசு இம்முறை சென்செஸ்சில் சாதிவாரி கணக்கொடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்துவிட்டு 1.4.2026 முதல் 15.4.2026 வரை நாடு முழுவதும் நடந்த முதல்கட்ட சென்செஸ் கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை. இரண்டாம் கட்ட கணக்கெடுப்பில் நடத்தப்படும் என்று ஏமாற்றி கொண்டுள்ளது. முதல் கட்டத்தில் எடுக்க மறுப்பதற்கு எந்த முகாந்தரமும் இல்லை. மாநில தேர்தல் காரணமாக தமிழகத்தில் 17.7.2026 முதல் 31.7.2026 வரை முதல் கட்ட சென்செஸ் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. அந்த கணக்கெடுப்பில் ஓபிசி/டிஎன்டி வகுப்பையும் சேர்க்க வேண்டும். மீண்டும் முதல் கட்டத்திலேயே நாடு முழுவதும் சாதிவாரி புள்ளி விபரங்களை சேர்ப்பதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
அரசு மக்களை ஏமாற்றி விடலாம் என்று நினைத்தால் இந்த முறை இந்திய முழுவதும் மக்களை ஒருங்கிணைத்து சென்செஸ் கணக்கெடுப்பை முற்றிலுமாக புறக்கணிப்போம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
.............................
நாகராஜ், தலைமை நிருபர்


Comments