Skip to main content

தேனி மாவட்டத்தில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு என்று சிலிண்டர் மற்றும் உணவு பொருட்கள் விலையை உயர்த்தினால் புகார் தெரிவிக்கலாம்: கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தகவல்

தேனி, ஏப்.7-

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்தி வரும் போர் காரணத்தினால் கச்சா எண்ணெய் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கடந்த மாதத்தில் பொதுமக்களிடையே தகவல் பரவியது. 

இதனைத்தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் வணிக உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வந்தது. இதன் காரணமாக சாலையோர துரித உணவு கடைகள், இரவு நேர டிபன் உணவகங்கள் தேனி மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் சில கடைகள் தற்காலிகமாக அடைக்கப்பட்டு விட்டன.

இருப்பினும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை பொருட்படுத்தாமல் நடத்தி வரக்கூடிய டீ கடைகள் மற்றும் ஹோட்டல்களில் உணவு பொருட்களில் விலைகள் திடீரென உயர்த்தப்பட்டுள்ளன. அதுபோல அடிப்படையாக தயாரிக்கக்கூடிய சில உணவு பொருட்களை கூட தயாரிப்பதை  நிறுத்தி விட்டனர்.

தேனி பகுதியில் இந்த திடீர் விலை ஏற்றத்தால் டீ, காபி, இட்லி, வடை போன்ற உணவுப்பொருட்கள் ரூ.2 முதல் ரூ 5 வரை விலை உயர்ந்துள்ளது. ஆனால் சில டீ கடை மற்றும் ஓட்டல் நிறுவனங்கள் விலைகளை ஏற்றாமல் பொருட்களின் குவாலிட்டி மற்றும் குவாண்டிட்டி தன்மையை மாற்றியும், அரைகுறை வேக்காட்டில் உணவுப் பொருட்களை தயாரித்து கொடுக்கின்றனர். இது குறித்து உணவு பொருட்கள் நுகர்வோராகிய பொதுமக்கள் கேட்டால் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு உள்ளது என்று ஒரு காரணத்தை கூறி தப்பித்து கொள்கின்றனர். இதில் என்ன கொடுமை என்றால் கேஸ் சிலிண்டர் பயன்படுத்தாத சில உணவு நிறுவனங்கள் கூட உணவு பொருட்களின் விலையை உயர்த்தி உள்ளனர்

இந்த திடீர் விலை ஏற்றத்தை சகித்து கொள்ள முடியாத பொதுமக்கள் சிலர் நாள்தோறும் புலம்பி வருகின்றனர். மேலும் சில பொதுமக்கள் அவதிக்குள்ளாகியும் வருகின்றனர். எனவே தேனி பகுதியில் நிலவி வரும் வணிக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இயற்கையானதா அல்லது சூழ்ச்சியின் காரணத்தால் ஏற்பட்டுள்ளதா என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தேனி மற்றும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வணிக கேஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்நிலையில் தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
தேனி மாவட்டத்தில் வீட்டு உபயோகம் மற்றும் வணிக ரீதியிலான எரிவாயு உருளைகள் தட்டுப்பாட்டினால் ஏற்படும் பிரச்சனைகள், எரிவாயு உருளைகள் நிர்ணயம் விலையினை விட கூடுதலான விலைக்கு விற்பனை செய்வது, எரிவாயு உருளைகளை கள்ளத்தனமாக பதுக்கிவைப்பது செய்யப்பட்டுள்ள மேலும், தேனி மாவட்டத்தில் உள்ள உணவகங்களில் உணவுப் பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தொடர்பான பிரச்சனைகள் குறித்து 04546-255046 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
...............................
நாகராஜ், தலைமை நிருபர் 

Comments