Skip to main content

போடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ஓ பன்னீர்செல்வம் வேட்பு மனு தாக்கல்

தேனி, ஏப்.6-

தேனி மாவட்டம், போடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் 6.4.2026 அன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இதற்கான வேட்பு மனுவை போடி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் நல்லையனிடம் முன்னாள் முதல்வரும், திமுக வேட்பாளருமான ஓ.பி.எஸ்., தனது வேட்பு மனுவை வழங்கினார். அப்போது தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., தேனி மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோபிநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் பெருமாள் ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக திமுக வேட்பாளர் ஓபிஎஸ்., மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என மக்கள் வெள்ளத்தில் போடி கட்டபொம்மன் சிலையில் இருந்து ஊர்வலமாக போடி தாலுகா அலுவலகம் வரை ஊர்வலமாக வந்து ஓபிஎஸ் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், 

தமிழக முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்னை வேட்பாளராக அறிவித்தார். வேட்பு மனு தாக்கல் செய்து இருக்கிறேன்.
தமிழ்நாடு முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் அனைவரும் மகத்தான வெற்றி பெறுவார்கள்.
போடி சட்டமன்ற தொகுதியில் 3 முறை வெற்றி பெற்று அந்த தொகுதி மக்களுக்கு நான் கொடுத்த வாக்குறுதிகள் மற்றும் மக்களின் கோரிக்கைகளையும் 100-க்கு 99.99 சதவீதம் நிறைவேற்றிய மனநிறைவோடு இருக்கிறேன் .

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் அதிமுகவிலிருந்து நீங்கள் விலகி வெளியே போய் இருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு நான் எங்கு வெளியே போனேன் அவர்கள் தானே விரட்டினார்கள். ஆர்.பி.உதயகுமாரும், அவருடன் சேர்ந்தவர்களும் தண்ணீர் பாட்டிலை கொண்டு எறிந்து என்னை வெளியேற்றியதை நேரில் வராவிட்டாலும், நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள்.  
எனது 50 ஆண்டுகால அரசியல் வாழ்வில்  25 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராகவும், 5 ஆண்டுகள் நகர் மன்ற தலைவராகவும் பதவி வகித்திருக்கிறேன். அந்த பதவி காலத்தில் எனது பணியை முழுமையாக மன நிறைவோடு கடைமையை ஆற்றிருக்கிறேன். எத்தகைய குற்றச்சாட்டுகள் என் மீது இல்லை.

மக்களின் அபிப்பிராயம் மற்றும் ஆதரவோடு மக்களின் பிரதிநிதிகள் வரவேண்டும். பழனிச்சாமி வந்த வழி தவறு. அவர் கட்சிக்கு வந்த வழியும் தவறு. அவரை தமிழக முதல்வராக ஆக்கிய சசிகலாவை பார்த்து  சூரியனை பார்த்து ஏதோ குறைக்கிறது என்று சொன்ன நன்றி உணர்வு இல்லாத ஒரு மனிதர் அவர்.
அவர் பொதுச்செயலாளராக வந்தது முதல் இன்று வரை, என்றைக்கும் தோல்வியை தான் சந்திப்பார். அவர் நிரந்தர பொதுச்செயலாளர் கிடையாது.
பொதுச்செயலாளர் பதவி குறித்து 6 வழக்குகள் சென்னை ஐகோர்ட்டு சிவில் நீதிமன்றத்தில்  நிலுவையில் உள்ளது என்று கூறினார்.
பேட்டியின் போது தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., முன்னாள் எம்.பி., ரவீந்திரநாத் முன்னாள் எம்.எல்.ஏ., லட்சுமணன் உள்பட கட்சியினர் பலர் உடன் இருந்தனர் .
........................
நாகராஜ், தலைமை நிருபர் 

Comments