Skip to main content

போடி சட்டமன்ற தொகுதியில் திமுக தேர்தல் அலுவலக பணிமனை திறப்பு : வேட்பாளர் ஓ.பி.எஸ்., ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

தேனி, ஏப்.6-

தேனி மாவட்டம், போடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். இவர் போடி தொகுதியில் உள்ள சமுதாய தலைவர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் உள்பட பல்வேறு சங்க நிர்வாகிகளை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கோரி வருகிறார். 

இந்நிலையில் திமுக தேர்தல் அலுவலக பணிமனைகள் போடி மற்றும் பழனிசெட்டிபட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணி மனைகள் திறப்பு விழா 6.4.2026 அன்று நடைபெற்றது. இதனை முன்னாள் முதல்வர், திமுக வேட்பாளர் ஓ பன்னீர்செல்வம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 

இந்நிகழ்வில் தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., முன்னாள் எம்.பி., ரவீந்திரநாத், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் போடி லட்சுமணன், ஆர்.டி. கணேசன் உள்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

இதற்கிடையே போடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போடி நகரில் உள்ள ஆரிய வைசிய சோழிய செட்டியார் சங்கம் நடுமண்டபம், ஜே.கே பட்டி 24 மனை தெலுங்கு செட்டியார் சங்கம், திருமலாபுரம் 24 மனை தெலுங்கு செட்டியார் காமாட்சி அம்மன் கோவில், திருமலாபுரம் நாடார் உறவினர் சங்கம், அனைத்து மகசூல் விவசாயிகள் சங்கம் உள்பட பல்வேறு சமுதாய தலைவர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள்  அனைவரையும் திமுக வேட்பாளர் ஓ.பி.எஸ்., சந்தித்து வளர்ச்சி திட்ட பணிகள் அனைத்தும் தொய்வின்றி தொடர்ந்து நடைபெற்றிட உதயசூரியன் சின்னத்தில் தன்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு கேட்டு கொண்டார். அப்போது ஆதரவு கேட்டு வந்த திமுக வேட்பாளர் ஓபிஎஸ் அவர்களுக்கு சமுதாய மற்றும் சங்க தலைவர்கள் பொன்னாடை அணிவித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதேபோன்று தேனி பழனிசெட்டிபட்டி போடி விலக்கு அருகே உள்ள கிருத்திக் கிராண்ட் ஹோட்டலில் ரெட்டி நல சங்கத்தின் சார்பில் நடைபெற்ற யுகாதி விழாவில் பங்கேற்ற முன்னாள் முதல்வர், திமுக வேட்பாளர் ஓ பி.எஸ்., அவர்களுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. அந்த விழாவில் ரெட்டி சமுதாய மக்களிடம் போடி சட்டமன்ற தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தன்னை பெரு வாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு ஓபிஎஸ் ஆதரவு கோரினார். அப்போது தேனி மாவட்ட ரெட்டி நல சங்க மாவட்ட தலைவர் டாக்டர் வி.ஆர்.ராஜன், செயலாளர் அருண் பாஸ்கர், பொருளாளர் செந்தில்குமார் கல்பனா ரெட்டி சமுதாய மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே போடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் செயல்வீரர்கள் கூட்டம் தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் செல்வன் எம்.பி., தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முன்னாள் முதல்வர், திமுக வேட்பாளர் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொண்டு போடி சட்டமன்ற தொகுதி வாக்காளர்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு பெருவாரியான வாக்குகள் சேகரிப்பது குறித்த ஆலோசனைகள் வழங்கினார்.

.............................

நாகராஜ், தலைமை நிருபர் 

Comments