Skip to main content

தேனி வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ராட்டினம் ஏலம் ரூ.2.44 கோடிக்கு போனது

தேனி, ஏப்.28-

தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 
இந்த ஆண்டுக்கான திருவிழா அடுத்த மாதம் மே 12-ந் தேதியில் இருந்து மே 19-ந் தேதி வரை 8 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது. 
இந்த திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தவும், திருவிழாவை காணவும் தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் தினசரி பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்வார்கள். இந்த திருவிழாவிற்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பொழுது போக்கிற்காக எந்திர ராட்டினம் நடத்துதவதற்கான ஏலம் 4-வது முறையாக கோவில் நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது. 

இந்த ஏலத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை திண்டுக்கல் மண்டல இணை ஆணையர் சபர்மதி தலைமை தாங்கினார். ஆய்வாளர் கார்த்திகேயன், வீரபாண்டி கோவில் செயல் அலுவலர் சுபிதா, மேலாளர் பாலசுப்பிரமணியம், கணக்கர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏலத்தில் ஏலதாரர்கள் 14 பேர் கலந்து கொண்டனர். 

4-வது முறையாக நடந்த இந்த மறுஏலத்தில் ராட்டினம் நடத்துவதற்கு ஏலத்தொகை ரூ.3 கோடியே 21 லட்சம் 50 ஆயிரம் என நிர்ணயம் செய்து தொடங்கியது. இதன் பின்னர் ஏல நிர்ணய தொகை படிப்படியாக குறைக்கப்பட்டு ரூ.2 கோடியே 50 லட்சம் என கோவில் நிர்வாகம் சார்பில் ஏலத்தொகை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த தொகைக்கு யாரும் ஏலம் கேட்க முன் வரவில்லை.

இதற்கிடையே முன்னதாக திறக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளி டெண்டர் கவரிலும் கோவில் நிர்வாகம் நிர்ணயித்த தொகைக்கு யாரும் டெண்டர் தொகை கேட்கவில்லை. எனவே இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் 4-வது முறையாக நடத்தப்படும் மறுஏலம் இது. திருவிழா நடத்துவதற்கு நிதி வேண்டும். கோவில் நிர்வாகம் நிர்ணயித்த ரூ.2 கோடியே 50 லட்சத்திற்கு கீழ் தொகையை குறைக்க வாய்ப்பு இல்லை. அதனால் ஏலதாரர்கள் கோவில் நிர்வாகம் நிர்ணயித்த தொகைக்கு ஏலம் எடுக்க முன் வரவேண்டும் என்று கூறினர். இதன்பின்னர் வேண்டுமென்றால் ஏலதாரர்கள்  வெளியே சென்று ஆலோசனை செய்துவிட்டு வந்து பின்னர் ஏலம் கேட்கலாம் என்றும் கூறினர். 

இதனைத்தொடர்ந்து ஏலம் நடைபெற்ற கோவில் அலுவலகத்தில் இருந்து பலமுறை வெளியே வந்து ஏலதாரர்கள் ஆலோசனை செய்தனர். அதன்பின்னர் ஏலத்தில் கலந்து கொண்ட ஏலதாரர்களில் சதீஷ் என்பவர் அதிகபட்சமாக ரூ.2 கோடியே 44 லட்சத்து 22 ஆயிரத்திற்கு ஏலம் கோரினார். இந்த ஏலத்தொகை கோவில் நிர்வாகம் நிர்ணயித்த தொகைக்கு நெருங்கி வந்ததன் காரணத்தால் மேற்கண்ட ஏலத்தொகைக்கு எந்திர ராட்டினம் நடத்துவதற்கான ஏலம் ஏற்று கொள்ளப்பட்டதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
...................................
நாகராஜ், தலைமை நிருபர் 

Comments