Skip to main content

எம்ஜிஆர், அம்மா ஆசியோடு தேனி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபியுங்கள்: ஆண்டிப்பட்டியில் நடந்த பிரசார கூட்டத்தில் இபிஎஸ்., பேச்சு

தேனி, ஏப்.14-

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி அமமுக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் இணைந்து 14.4.2026 அன்று பிரசாரம் செய்தனர்

பிரசார கூட்டத்தில் முதலில் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பேசுகையில், கடந்த 2002-ம் ஆண்டு ஆண்டிப்பட்டி இடைத்தேர்தல் வேட்பாளராக நான் வந்தபோது இருந்த அதே ஆரவாரம் இன்றும் உள்ளது. இந்த மாவட்டத்தின் 4 தொகுதிகளையும் நாம் வெல்ல வேண்டும். அரசியலுக்காக எதையும் பேசும் கூட்டம் தான் திமுக கூட்டணி.  மு.க ஸ்டாலின் ஒரு வீடியோ போட்டிருக்கிறார், நாளை மறுநாள் இந்தியாவின் அனைத்து மாநில தொகுதிகளையும் மறுசீரமைப்புக்கு மசோதா தாக்கல் செய்கிறார்கள், அதை எதிர்த்து பேசுகிறார்.  

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இதனால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு ஏற்படாது என்று ஏற்கெனவே சொல்லி விட்டனர். ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது எங்களை பற்றி குறை சொல்ல முடியாத ஸ்டாலின், டெல்லியை மிரட்டி பார்க்கிறார் இவ்வாறு டி.டி.வி.தினகரன் பேசினார்.  


இதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், இந்த மாவட்டத்துக்கு தனி வரலாறு உண்டு, 2 முதல்வர்களை கண்ட மாவட்டம் தேனி மாவட்டம். எம்ஜிஆர், ஜெயலலிதா இரு பெரும் தலைவர்கள் இந்த மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு முதல்வரானார்கள்.  ஆண்டிப்பட்டி தொகுதியில் ஏற்கனவே எழுச்சி பயணத்தில் நான் உங்களை சந்தித்தேன், டி.டி.வி.தினகரன் குறிப்பிட்டது போல ஆண்டிப்பட்டி நகரமே அதிர்கிறது மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்திருக்கிறோம்.  தேர்தலில் நாம் வெற்றி பெறுவோம் என்பதற்கு உங்கள் ஆரவாரமே சாட்சி. 

அதிமுக சார்பில் கம்பம் தொகுதியில் எஸ்டிகே. ஜக்கையன், போடிநாயக்கனூர் மற்றும் ஆண்டிப்பட்டி தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். அமமுக சார்பில் பெரியகுளம் தொகுதியில் நிற்கும் டாக்டர் கே.கதிர்காமுக்கு குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். 4 வேட்பாளர்களையும் வெற்றி பெற வைத்து எம்ஜிஆர், அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களின் ஆசியோடு தேனி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபியுங்கள்.

தேனி மாவட்டம் என்றாலே முல்லைப் பெரியாறு அணை. நானும் ஒரு விவசாயி, இன்றைக்கும் விவசாயம் செய்கிறேன்.  முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்றும் முதற்கட்டமாக 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திவிட்டு, அணையை பலப்படுத்திவிட்டு 152 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.  ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அணையை பலப்படுத்த ஒப்பந்தம் விடப்பட்டு ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பேபி அணை பலப்படுத்தப்பட்டது, கைப்பிடி சுவர் கட்டப்பட்டது, அதற்குப் பிறகு அணையின் இரு கரைகளிலும் இருக்கும் மரங்களை வெட்டுவதற்கு முயற்சி எடுத்தோம், கேரள அரசு அனுமதிக்கவில்லை. தடுத்து நிறுத்தி நம் அதிகாரிகள் மீது வழக்கு போட்டார்கள். இருப்பினும் கட்டுமானப் பொருட்களை எடுத்துச்செல்ல முடியாத அளவுக்கு தடுத்து நிறுத்தி கேரள அரசு இடையூறு செய்தது. அணையை பலப்படுத்தியே ஆக வேண்டும் என்பதால், நான் கேரள முதல்வரை நேரடியாக சந்தித்துப் பேசினேன். அடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இன்றைய முதல்வர் இதை கண்டு கொள்ளவே இல்லை.  

கம்யூனிஸ்ட்டோடு திமுக கூட்டணியில் உள்ளது, இதுவரை முதல்வர் ஸ்டாலின் கேரளா சென்று அந்த மாநில முதல்வரை பார்க்கவில்லை, சந்தித்து பேசியிருந்தால் 152 அடியாக உயர்த்தியிருக்கலாம். அப்படி செய்தாரா..?  விவசாயிகள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்பது தான் ஸ்டாலின் எண்ணம். ஸ்டாலின் நினைத்திருந்தால் விவசாயிகள் பிரச்னைகளை கேரள முதல்வரிடம் பேசி தீர்வு கண்டிருக்கலாம். இப்படி விவசாயிகளை புறக்கணித்த முதல்வர் வேண்டுமா? கேரளா அதற்கு பக்கத்தில் ஒரு அணை கட்டுவதாக குறிப்பிட்டனர், அதிமுக அரசு அதற்கு இடம் கொடுக்கவில்லை. ஸ்டாலின் அதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. 

5 மாவட்ட மக்கள் மீது அக்கறை இருந்தால் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி நீரின் அளவை உயர்த்தியிருக்கலாம். பென்னிகுவிக் தனது சொந்த பணத்தில் இந்த அணையை கட்டினார், அவருக்கு அம்மா மணி மண்டபம் கட்டி கவுரவித்தார். திமுக வெளிநாட்டுக்கு போய் அங்கு சிலை திறப்பதாக சொல்லி, அதற்கு பணம் கட்டாமல் புறக்கணித்தவர் தான் முதல்வர் ஸ்டாலின்.  திமுக கூட்டணியில் உள்ள அத்தனை கட்சிகளுக்கும் ஒரே கொள்கையா..? ஒரே கொள்கை என்றால் எதற்காக தனித்தனி கட்சி..? இவர்களே புதுச்சேரி, கேரளாவில் எதிர்த்து நின்று போட்டி இடுகிறார்கள். தேர்தல் நேரத்தில் பொய் சொல்லி வாக்கு கேட்கும் முதல்வர் தேவையா?  இந்த மண்ணில் இருந்த ஒருவர் வேறு பக்கம் சென்றுவிட்டார். நம்மை விட்டு போய்விட்டார், எங்கிருந்தாலும் வாழ்க. நான் அவரைப்பற்றி பேசவில்லை. திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு புது திட்டம் இருந்ததா?

73 ஆண்டு கால தமிழக ஆட்சி வரலாற்றில் எத்தனையோ அரசுகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. கடந்த 2021-ம் ஆண்டு வரை ஒட்டுமொத்தமாக இருந்த கடன் ரூ. 4 லட்சத்து 85 ஆயிரம் கோடி மட்டுமே, ஆனால் அதைவிட திமுகவின் இந்த 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி கடன். வருஷத்துக்கு ஒரு லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர். இந்த அரசு சிறப்பான அரசா? நம்மை கடன்காரன் ஆக்கிவிட்டார் ஸ்டாலின். வேறு என்ன சாதனை?  இந்தியாவுக்கே முதன்மையான மாநிலமாம், எதில்? ஊழல் செய்வதிலும், கடன் வாங்குவதிலும் தான். இந்த கடனையெல்லாம் நீங்கள் தான் கட்டவேண்டும். நான் உட்பட, தினகரன் உட்பட எல்லோரையும் கடன்காரன் ஆக்கி விட்டார். மீண்டும் ஸ்டாலினிடம் தமிழகத்தை ஒப்படைத்தால் நாடு தாங்குமா? இனி தமிழ்நாட்டை காப்பாற்றுவது மிகவும் கடினம். ஒவ்வொரு வாக்கும் தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கிறது. இப்படி கடன் வாங்கிய அரசு தேவையா அல்லது சிறப்பாக ஆட்சி செய்த அதிமுக தேவையா? அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கூடுதல் வருவாய் வருகிறது, அப்புறம் எதற்கு கடன்..?

ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரியை சேர்த்து, அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் 17 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்தோம்.

தேனியில் கூட சட்டக்கல்லூரி கொடுத்தோம், புதிய மாவட்டம், தாலுகா, கோட்டம் எல்லாம் அதிமுக கொடுத்தது. திமுக கொள்ளைதான் அடித்தது. கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் இதுதான் 5 ஆண்டு காலம் திமுகவின் சாதனை. மக்களை சுரண்டி பணத்தை அபகரிக்கும் அரசு தேவையா?  விண்ணை முட்டும் அளவுக்கு உணவுப்பொருள்களின் விலை உயர்ந்துவிட்டது. விலைவாசியைக் கட்டுப்படுத்த திமுக அரசு முயலவில்லை. ஏழை நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிமுக ஆட்சியில் விலைவாசி உயரும்போது, விலை கட்டுப்பாட்டு நிதி என்று 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி வைக்கப்பட்டது. அதன்மூலம், விலைவாசி உயரும் சமயங்களில் அண்டை மாநிலங்களில் எங்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கிறதோ அங்கிருந்து கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழக மக்களுக்குக் கொடுக்கப்பட்டது.

திமுக ஆட்சியில் மின்கட்டணம் கடுமையாக உயர்ந்துவிட்டது. வீடுகளுக்கு முதலில் வரியை 52% உயர்த்தினார்கள். ஆண்டுக்கு 5% என மூன்றாண்டுகளில் 15% உயர்த்தி, இப்போது 67% ஆக உள்ளது. கடைக்கு பீக் ஹவர் என்ற பெயரில் டபுள் சார்ஜ் வசூலிக்கிறார்கள். வீட்டுவரி 100% உயர்ந்துவிட்டது, ஆண்டுக்கு 6% உயர்வு என்று 2 வருடத்தில் 12% ஏற்றி விட்டனர். கடைக்கு வரி 150% உயர்ந்து விட்டது, கடைக்கும் ஆண்டுக்கு 6% உயர்வு. போதாக்குறைக்கு குப்பைக்கும் வரி போட்டு விட்டனர். மக்கள் மீது வரிச்சுமை சுமத்திய அரசு தேவையா? குடிநீர் இணைப்புக்கு அதிமுக ஆட்சியில் ஆண்டுக்கு 900 ரூபாயாக இருந்தது, அதனை 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி விட்டனர்.

அதிமுக ஆட்சியில் எதுவும் செய்யவில்லை என்கிறார் ஸ்டாலின், தேனிக்கு கொடுத்த திட்டங்களைச் சொல்கிறேன்,. தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பெரியார் அணை நீர்மட்டம் அளவு உயர்த்தப்பட்டது, பென்னிகுவிக் மணிமண்டபம் அமைப்பு, 4000 வீடுகள், போடியில் தொழில் கல்லூரி, வீரபாண்டி கலை கல்லூரி, கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம், பெரியகுளம் வீரபாண்டியில் நர்சிங் கல்லூரி, 18-ம் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்பட்டது. கம்பம் உள்ளிட்ட பல நகருக்கு கூட்டுக்குடிநீர் திட்டம், வீரபாண்டி சிப்காட் அமைப்பு, தொண்டமான் அணை திட்டம் 110-ல் அறிவிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டு, டெண்டர் வெளியிடப்பட்டது, திமுக ஆட்சி கிடப்பில் போடப்பட்டது. அதிமுக ஆட்சி வந்ததும் திட்டம் நிறைவேற்றப்படும். அதிமுக ஆட்சியின் திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும். 

இந்த தேர்தலில் 297 அறிவிப்புகள் வெளியிட்டிருக்கிறோம், அதில் சிலவற்றை சொல்கிறேன். திமுக ஆட்சியின் வரிச்சுமையால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பத்தைக் களைய உதவித்தொகை 10 ஆயிரம் ரூபாய் வங்கியில் செலுத்தப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்தால், எல்லா குடும்பத் தலைவிக்கும் மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லாமல் ஃப்ரிட்ஜ் வழங்கப்படும். சரியான நேரத்திற்கு பணியிடங்களுக்கு செல்வதற்கும், படிக்கச் செல்வதற்கும் ஏதுவாக, 5 லட்சம் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனம் வாங்க, தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் வாழ்வாதார உதவியாக 3 சிலிண்டர்கள் விலையின்றி வழங்கப்படும். பொங்கல் தொகுப்போடு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.  தீபாவளி தோறும் பெண்களுக்கு பட்டுச்சேலை வழங்கப்படும். பெண்களை போல இனி ஆண்களும் நகர பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம். ரேஷன் கடையில் கொடுக்கப்படும் அரிசி தரமில்லை என்ற தகவல் வருகிறது. அதனால் நவீன அரிசி ஆலையில் உற்பத்தி செய்து கடையில் கிடைக்கும் அரிசி போன்றே ரேஷன் கடையில் கொடுக்கப்படும். விலையில்லா அரிசி கடை அரிசி போன்று கொடுப்போம். எத்தனையாயிரம் கோடி செலவானாலும் கொடுப்போம். 

ரேஷன் கடையில் இதுவரை விலை கொடுத்து வாங்கிக்கொண்டிருக்கும் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் விலையின்றி வழங்கப்படும்.  நகரப்பகுதியில் சாலையோர வியாபாரிகள் வாங்கிய கூட்டுறவு வங்கிக் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு கடனும் தள்ளுபடி செய்யப்படும். புதிதாக 2 லட்சம் ரூபாய் வரை எவ்வித ஜாமீனும் இல்லாமல் கடன் வழங்கப்படும்.

பட்டப்படிப்பு படித்து பதிவு செய்த இளைஞர்களுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாயும்,+2 வரை படித்தவர்களுக்கு ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். அம்மா இல்லம் திட்டம் மூலம், வீடு இல்லாத அனைவருக்கும் அரசு சார்பில் நிலம் வாங்கி, அற்புதமான கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும். பட்டியலின, ஆதிதிராவிடர், மலைவாழ் மக்கள் வாரிசுகள் தனிக்குடித்தனம் சென்றாலும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்.  


ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த 5 லட்சம் ரூபாய் கொடுக்கப்படும், உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். வீரர்களுக்கு காப்பீடு செய்து பிரீமியத்தை அரசே செலுத்தும். மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம். பை பை ஸ்டாலின். அதிமுக வின்னிங், நல்லாட்சி கம்மிங்’’ என்று முடித்தார். இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
.................................

நாகராஜ், தலைமை நிருபர்

Comments