தேனி-வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ராட்டினம் ஏலம் ஒத்திவைப்பு : ராட்டினம் இயக்க புதிய நிபந்தனை விதிப்பதாக கூறி ஏலத்தில் இருந்து ஒப்பந்ததாரர்கள் வெளிநடப்பு
தேனி, பிப்.12-
தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா வருகின்ற ஏப்ரல் மாதம் 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 12-ந் தேதியில் இருந்து மே 19-ந் தேதி வரை 8 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது.
இந்த திருவிழாவில் பக்தர்கள் தீச்சட்டி, ஆயிரம் கண்பானை, முடிகாணிக்கை, காது குத்துதல் போன்ற நேர்த்திக்கடன் செலுத்தவும், திருவிழாவை காணவும் தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் தினசரி பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்வார்கள். இந்த திருவிழாவிற்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பொழுது போக்கிற்காக எந்திர ராட்டினம் நடத்துதவதற்கான ஏலம் 12.2.2026 அன்று கோவில் நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த ஏலத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை திண்டுக்கல் மண்டல இணை ஆணையர் கார்த்திக் தலைமை தாங்கினார். உதவி ஆணையர் ஜெயதேவி, ஆய்வாளர் கார்த்திகேயன், வீரபாண்டி கோவில் செயல் அலுவலர் சுபீதா, நாராயணி, மேலாளர் பாலசுப்பிரமணியம், கணக்கர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏலத்தில் ஏலதாரர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் கண்மலர் ஏலம் ரூ.5 லட்சத்து 87 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்த ஏலத்தில் 4 பேர் கலந்து கொண்டனர். இவற்றில் மாரிச்சாமி என்பவர் ரூ.5 லட்சத்து 75 ஆயிரத்துக்கு டெண்டர் மூலம் ஏலம் எடுத்துள்ளார்.
அதுபோல உணவு கூடம் நடத்துவதற்கான ஏலம் ரூ.38 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதில் 6 பேர் கலந்து கொண்டனர். இவற்றில் ராஜசேகர் என்பவர் ரூ.36 லட்சத்து 46 ஆயிரத்து 600-க்கு டெண்டர் மூலம் ஏலம் எடுத்துள்ளார்.
இந்த ஏலத்தில் முக்கியமானதான ராட்டினம் நடத்துவதற்கு ரூ.3 கோடியே 51 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதன் பின்னர் ஏல நிர்ணய தொகை படிப்படியாக குறைக்கப்பட்டு ரூ.3 கோடியே 35 லட்சம் என கோவில் நிர்வாகம் சார்பில் ஏலத்தொகை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த ஏலத்தில் 6 பேர் கலந்து கொண்டனர். இந்த ஏலத்திற்கான டெண்டர் கவர் பிரிப்பதற்கு முன்பே ஏலத்தில் கலந்து கொண்டவர்கள் ராட்டினம் நடத்துவதற்கான நேரம் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை என்று புதிய நிபந்தனை விதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிய வருகிறது அந்த குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் ராட்டினம் இயக்கினால் கண்டிப்பாக ஏலத்திற்கான தொகையில் எடுக்க முடியாது என்று கூறி ஏலத்திலிருந்து சிலர் திடீரென வெளிநடப்பு செய்தனர். இதனைத்தொடர்ந்து ராட்டினம் இயக்குவதற்கான ஏலத்தை கோவில் நிர்வாகம் நிர்ணயித்த தொகைக்கு எடுக்க யாரும் முன் வராத காரணத்தால் ராட்டினம் நடத்துவதற்கான ஏலம் ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து முடி காணிக்கை ஏலம் நடைபெற்றது. இதற்கான ஏலத்தொகை ரூ.14 லட்சத்து 40 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்த ஏலத்தில் 5 பேர் கலந்து கொண்டனர் இவற்றில் மாயி என்பவர் ரூ.14 லட்சத்து 50 ஆயிரத்து ஒன்று-க்கு டெண்டர் மூலம் ஏலம் எடுத்துள்ளார்.
சித்திரை திருவிழாவிற்கான ஏலம் மிகுந்த பரபரப்புடன் தொடங்கினாலும் ராட்டினம் இயக்குவதற்கான ஏலத்தை எடுக்க யாரும் முன்வராததால் இன்றைய ஏலம் சப்தம் இல்லாத கடல் போல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
...........................
நாகராஜ், தலைமை நிருபர்




Comments