தேனி யூனியன், அம்பாசமுத்திரம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.
தேனி, ஜன.27-
தேனி மாவட்டத்தில் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. தேனி ஊராட்சி ஒன்றியம் அம்பாசமுத்திரம் ஊராட்சியில் 26.12026 அன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசுகையில், கிராம சபை கூட்டத்தின் முக்கிய நோக்கம் ஒரு கிராமத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை கண்டறிந்து பொதுமக்களின் முன்னிலையில் ஆலோசனைகள் செய்து அதனை செயல்படுத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவதாகும்.
அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கிராமப்புற மக்களின் வாழ்வாதரத்தினை மேம்படுத்தும் வகையில் பல்வேறு முன்மாதிரியான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் கிராமப்புறங்களை விரைவாக முன்னேற்றம் அடைய செய்யவும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தவும் அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக குழந்தை திருமணம் சிறுவயதில் கர்ப்பம் அடைதல். அதனால் குறைவான எடையில் குழந்தை பெற்றெடுத்தல் போன்றவற்றை தடுப்பதன் மூலமே ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும். எனவே, அரசு நிர்ணயித்துள்ள பெண்களுக்கு 21 வயது ஆண்களுக்கு 25 வயது பூர்த்தி அடைந்த பின்னரே திருமணம் செய்து வைப்பதை பெற்றோர்கள் உறுதி கொள்ள வேண்டும். மாணவர்களின் தரத்தை மேம்படுத்த தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் கல்வி உதவித்தொகைகளும் அரசால் வழங்கப்படுகிறது. எனவே. இடைநிற்றல் தவிர்க்கப்பட வேண்டும். கல்வி கற்றால் மட்டுமே ஒரு மனிதன் சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்பதை கருத்திற்கொண்டு. மாணவர்கள் விரும்பும் படைப் பிரிவுகளில் உயர்கல்வி பயில்வதை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்.
அரசு திட்டங்களில் படைந்துள்ள பயனாளிகளின் தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்தவும் திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும், மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறியவும். அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்ளும் உங்க கனவ சொல்லுங்க என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பாக பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் வருடத்திற்கு 6 முறை கிராம சபைக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது. கிராமப்புற மக்களின் நலனுக்காக நடத்தப்படும் இதுபோன்ற கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பேசினார்.
இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மக்கள் திட்டமிடல் இயக்கம் தொழிலாளர் வரவு செலவு திட்டம். நலிவு நிலை குறைப்பு நிதி. தூய்மை ஏரிகள் புதுப்பித்தல் குறித்த விவரம், தொகுதி மேம்பாட்டுத் திட்டம். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் மற்றும் இதம் தலைப்புகளிலும் விவாதிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து தொழுநோய் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட கலெக்டர் தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்றுக்கொண்டனர்
இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தமிழரசி, மகளிர் திட்ட அலுவலர் சந்திரா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் பார்த்திபன்.தோட்டக்கலை துணை இயக்குநர் நிர்மலா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) வளர்மதி, உதவி இயக்குநர்கள் ஊராட்சிகள் மற்றும் தணிக்கை உம்முல் ஜாமியா, வெங்கடேஸ்வரன் முதன்மை கல்வி அலுவலர் நாகேந்திரன், தேனி தாசில்தார் சதீஷ்குமார், அம்பாசமுத்திரம் ஊராட்சி செயலாளர் தமிழ்செல்வி உள்பட அலுவலர்கள், கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று தேனி ஊராட்சி ஒன்றியம் ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் பாலச்சந்தர் தலைமையில் நடைபெற்றது. அரண்மணைப்புதூர் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் ஊராட்சி செயலாளர் ரதவேல் தலைமையில் நடைபெற்றது. கொடுவிலார்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது.
நாகலாபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் சிவலிங்கநாயக்கன்பட்டியில் உள்ள சமுதாய கூடத்தில் ஊராட்சி செயலாளர் சுருளி தலைமையில் நடைபெற்றது. கோவிந்தநகரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. சீலையம்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் பாண்டி தலைமையில் நடைபெற்றது.
அதுபோல பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம், வடபுதுப்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.
..............................
நாகராஜ், தலைமை நிருபர்



Comments