Skip to main content

தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது

  

தேனி, மே.27-
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், இன்று (27.05.2026) மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகள் சுயமாக வாழ்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதன் மூலம் அவர்கள் வாழ்விலும் முன்னேற்றம் காண முடியும் என்பதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசின் சார்பில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில்,  மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக இன்றைய தினம் நடைபெற்ற சிறப்பு குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி அடையாள அட்டைகள், மாதாந்திர உதவித்தொகை. மூன்று சக்கர வாகனம், காதுக்கருவி, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 102 மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் அவர்கள், மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து, ரூ.8,14,400/- மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 8 பயனாளிகளுக்கும், ரூ.43,470/- மதிப்பிலான ஸ்மார்ட் போன் 3 பயனாளிகளுக்கும், ரூ. 3,00,000/- மதிப்பிலான நவீன செயற்கை கால் 4 பயனாளிகளுக்கும் ரூ.2376/- மதிப்பிலான ஊன்றுகோல் 4 பயனாளிகளுக்கும், ரூ.457/-மதிப்பிலான ஒளிரும் மடக்குக்குச்சி மற்றும் கருப்பு கண்ணாடி 1 பயனாளிக்கும், ரூ.7,650/- மதிப்பிலான காதொலிக்கருவி 2 பயனாளிகளுக்கு என மொத்தம் 22 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.11,68,353/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, மாவட்ட வழங்கல் அலுவலர் நல்லையா, தனித்துணை கலெக்டர் (ச.பா.தி) கவிதா, இணைப்பதிவாளர் (கூட்டுறவுத்துறை) நர்மதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எடிசன் உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
...........................
நாகராஜ், தலைமை நிருபர் 

Comments