தேனியில் வாக்காளர்கள் இடையே 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி: மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், தொடங்கி வைத்தார்.
தேனி, ஏப்.2-
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தேனி-அல்லிநகரம் நகராட்சியில் வாக்காளர்களிடையே 100 சதவிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற மூன்று சக்கர வாகன வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் 1.4.2026 அன்று தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற 2026 பொதுத்தேர்தல் முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள 198ஆண்டிபட்டி, 199.பெரியகுளம் (தனி), 200.போடிநாயக்கனூர் மற்றும் 201கம்பம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வருகின்ற 23.4.2026 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. வாக்காளர்கள் அனைவரும் 100% வாக்களிப்பை உறுதி செய்வதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்ந்து இருசக்கர வாகனப் பேரணிகள், கையெழுத்து இயக்கம், சுவரொட்டி விளம்பரம் துண்டுப்பிரசுரம் வழங்குதல், ரங்கோலி நடைபயண பேரணி மனித சங்கிலி, தெரு நாடகம், விளம்பரப் பதாகைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் விழிப்புணர்வுப் பணிகள் அனைத்து சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் குறிப்பாக, முதன் முறை வாக்காளர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் என அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் தேர்தல் நடவடிக்கைகளில் பங்களிப்பு செய்திட ஊக்குவித்திடும் நோக்கில் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில், 1.4.2026 அன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணியானது. தேனி-அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கி இரயில்வே கேட் வரை சென்று நிறைவு பெற்றது. இப்பேரணியில், 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். மேலும், இந்த பேரணியில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் பணிபுரியும் களப்பணியாளர்களும் பேரணியில் கலந்து கொண்டு தேர்தல் தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முன்னதாக, மாற்றுத்திறனாளிகளின் மூன்று சக்கர வாகனத்தில் வாக்காளர் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை ஒட்டி தேர்தல் திருவிழாவில் கலந்துகொண்டு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சந்திரா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எடிசன், தேனி தாசில்தார் சதீஸ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
.........................
நாகராஜ், தலைமை நிருபர்


Comments